திருச்சியில் தடகள வீரர், வீராங்கனைக்கு உபகரணங்கள் வாங்க நிதி உதவி
தடகள வீரர் வீராங்கனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் கால்பந்து, வாலிபால், கபடி போன்ற குழு போட்டிகளுக்கும் மற்றும் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், தடை தாண்டி ஓடுதல் போன்ற தடகளப் போட்டிகளுக்கும் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில் ஒருவரின் உடல் தகுதி உடல் திறமை ஆகியவற்றை சரியான வகையில் நிரூபிப்பதற்கு தடகளப் போட்டிகள் தான் முக்கியமானது ஆகும். அடுத்தவர் தயவு இல்லாமல் முழுக்க முழுக்க தன் உடல் சார்ந்த தகுதியின் மூலமே தடகளப் போட்டியில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் கிராம அளவில் நகர அளவில் மாவட்ட அளவில் எத்தனையோ திறமையான வீரர்கள், வீராங்கனைகள் வெளியே தெரியாமல் முடங்கி போய் விடுகிறார்கள். அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து மாநில, தேசிய ஏன் சர்வதேச அளவில் பங்கேற்க செய்வதற்கு உரிய வழிகாட்டல்கள் நமது நாட்டில் தற்போதைய பள்ளி , கல்லூரி விளையாட்டு துறைகளில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதனால் தான் சர்வதேச தடகள போட்டிகளில் நம் வீரர்களிடம் திறமை இருந்தும் வெளியே காட்ட முடியாமல் தவிக்கிறார்கள். குன்றிலிட்ட விளக்காக ஒளி கொடுக்க வேண்டியவர்கள் குடத்திலிட்ட விளக்காக அணைந்து போகிறார்கள். இந்த நிலைமையை மாற்ற மத்திய ,மாநில அரசுகள் தடகளப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். தடகள போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிக அளவில் பரிசு மற்றும் பரிசு தொகைகளை அறிவிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் மாநில அளவில் ஒவ்வொரு தடகள போட்டிக்கும் தனித்தனியாக அவ்வப்போது போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் வருங்காலத்தில் தேசிய அளவில் சாதனைகள் படைக்க முடியும். தேசிய அளவில் சாதனை படைப்பவர்கள் சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி வாகை சூட முடியும். ஏதோ பெயரளவிற்கு சில இடங்களில் மட்டும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த தடகள போட்டியில் 16வயது மகளிர் பிரிவில் ஒட்டு மொத்த மதிப்பெண் பெற்றும், 100 மீட்டர் ஒட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றும், திருச்சி மாவட்ட அளவில் 16 வயது பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் 12.05 ரிக்கார்டு வைத்து உள்ள தடகள வீரர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது.
இவர்களில் வருகிற 13.10.22 முதல் 16.10.22 திருவண்ணாமலையில் மாநில அளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் எஸ்.ஜனனியை ஆப்பிள் மில்லட் நிறுவனர் துரை.வீரசக்தி பாராட்டி தடகள போட்டிக்கு தேவையான பொருட்களை கொடுத்துடன் மேலும் 600 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் செந்தில்வேலுக்கும் தடகள போட்டிக்கு தேவையான ரூ.10000 மதிப்பிலான பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், தடகள வீரர்களை பாராட்டியதுடன் , ஆப்பிள் மில்லட் துரை.வீரசத்திக்கு நன்றியை தெரிவித்தார். இதில் கோல்டன் தடகள சங்க பயிற்சியாளர் எம்.கனகராஜ் மற்றும் கோல்டன் தடகள சங்க வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu