திண்டுக்கல் பெண் படுகொலை வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் 5 பேர் சரண்
பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நந்தவன்பட்டியில், கடந்த 2012-ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டி பகுதியை சேர்ந்த நிர்மலா தேவி(60), அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடந்த 22-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி, டேவிட் நகர் பகுதி அருகே கொலை செய்த நிர்மலாதேவியின் தலையை தனியாக வெட்டியெடுத்து, பசுபதி பாண்டியனின் வீட்டில் போட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
தகவலறிந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் அதிகாரிகள், நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அலெக்ஸ் பாண்டியன், ரமேஷ் குமார், சங்கிலி, தமிழ் செல்வம், முத்துமணி ஆகிய 5 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம்( எண் 4 ) நீதிபதி குமார் முன்பு இன்று சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருகிற 28-ம் தேதி வரை முசிறி கிளை சிறையில் அடைக்க நீதிபதி குமார் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சரணடைந்த குற்றவாளிகள் 5 பேரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப் பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu