கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியது அ.தி.மு.க.விற்கு பலமா, பலவீனமா?
தமிழகத்தில் ஐந்தாண்டு காலம் அ.தி.மு.க.வின் தோளில் சவாரி செய்து வந்த பா.ஜ.க. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறக்கை முளைத்த கிளிக்குஞ்சு போல் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகித்து 4 சட்டமன்ற தொகுதிகளை பெற்ற பா.ஜ.க.விற்கு சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை வந்ததன் காரணமாக தற்போது தனித்து நின்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு போர்க்களமாக இதனை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாத அளவிற்கு தோல்வியை தழுவியதற்கு காரணமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது தான் என்ற விமர்சனம் அப்போது வந்தது. மதவாத கட்சி என்ற அடை மொழியுடன் கூடிய பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் அளவிற்கு அல்லது தி.மு.க.வுடன் மல்லுக்கட்டும் அளவிற்கு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பது அக்கட்சி முன்னணியினர் அப்போது கூறிவந்த கருத்து.
அந்த கருத்துக்களுக்கு எல்லாம் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தான் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் ஒரு முறிவு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியதாக அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்த சிலநிமிடங்களில் அ.தி.மு.க மாநகராட்சி நகராட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, அவர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக தான் இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க. வெளியேறியது பற்றி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் தாங்கள் தனித்து போட்டியிடுவதற்கு காரணம் தங்களது பலம் என்ன என்பதை இந்த தேர்தலின் மூலம் அறிந்து கொள்வது மட்டுமே காரணம் என கூறி இருப்பதோடு அதிமுக தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த கூட்டணி தொடரும் என்ற அடிப்படையில்தான் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க.தரப்பில் இதுவரை பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியது எங்களுக்கு மிகப்பெரிய பலம் மதவாத கட்சி என்ற அடைமொழியை கொண்ட பா.ஜ.க. வெளியேறியது வெளியேறிதன்மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும். அதனால் இந்த தேர்தலில் நாங்கள் அதிக வார்டுகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியது அ.தி.மு.க.விற்கு பலமா அல்லது பலவீனமா என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் தெரியவரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu