பிரதமர் வருகை: திருச்சியில் பலத்த பாதுகாப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோவில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
அந்தவகையில் இன்று 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமாக விளங்கக்கூடிய திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி திருச்சி வருகிறார்.
முன்னதாக நேற்று மாலை சென்னையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணி அளவில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடுகிறார்கள். அதை மோடி கேட்கிறார். அதனுடன் அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். முன்னதாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் (எஸ்.பி.ஜி.) கடந்த 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பிரதமர் ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமான நிலையத்தில் இருந்தும், ஸ்ரீரங்கம் கோவில் பகுதி வரையிலும் பிரதமரின் வருகைக்கான பாதுகாப்பு ஒத்திகையும் நேற்று காலை நடைபெற்றது. ஒத்திகையின்போது, சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார்கள் நீண்டவரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் பாதுகாப்பு கருதி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu