மாநகராட்சியுடன் பனையகுறிச்சி ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருச்சி மாநகராட்சியின் எல்லையை நூறு வார்டுகளுடன் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, கீழக்குறிச்சி, நவல்பட்டு, சோழமாதேவி, குண்டூர் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
இந்நிலையில் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் புதிதாகஇணைக்கக் கூடாது என்று அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு பனையகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பனையக்குறிச்சி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைப்பதால், வரி உயர்வு ஏற்படுவதுடன் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரமான 100 நாள் வேலை இல்லாமல் போகும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகமாக இந்தப் பகுதியில் இருப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். ஆகவே பனையகுறிச்சி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென திரண்டு முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu