திருச்சி அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலில் குளித்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளது. இன்று மதியம் இந்த வாய்க்காலில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஜெட்டின் (வயது13), முருகேஷ் என்பவரின் மகன் கமல்நாத் (வயது 12), சிவகுமார் என்பவரது மகன் கௌதம் (வயது 14), மற்றும் மஞ்சம் சஞ்சய் (வயது 15), ஆகிய 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஜெட்டின், கமல்நாத், கௌதம் ஆகிய 3 பேரும் தண்ணீரில் திடீரென மூழ்கினர். இதைப்பார்த்த மஞ்சம் சஞ்சய் அங்கிருந்து ஓடி சென்று ஊரில் இருந்த மக்களை அழைத்து வந்தான். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் ஒரு சிறுவனின் உடலை மீட்டனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஜெட்டின் உடலை மீட்டதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கமல்நாத்தை திருச்சி அரசு மருத்துவமனையிலும், கௌதமை துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் கமல்நாத்தும் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் கௌதமனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்