கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம்.ஐ.டி. 100 அடி சாலை அய்யனார் நகர் விஸ்தரிப்பு பகுதியில் பட்டியல் இன மக்களின் (இந்து குறவர்கள்) குல தெய்வமான அகோர வீரபத்திரன், பொம்மக்கா, இலாட குருசன்னாசி, நாகம்மா, மதுரைவீரன் ஆகிய கோவில்கள் உள்ளது.
இந்த கோவில் அந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் குலதெய்வமாகவும், வழிபாட்டு தெய்வமாக 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அந்த கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் விழாக்கள் நடைபெறும். அப்பொழுது இந்த கோவிலில் வழிபடும் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி விழா நடத்துவது வழக்கம்.
அந்த பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கும் பட்டியலின மக்கள் வழிபடும் கோவிலுக்கு செல்வதற்கு 40 அடி அகலத்திற்கு பாதை இருந்ததாகவும் இதனால் திருவிழாக்காலங்களில் எளிதாக சென்று வருவதோடு வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் அய்யனார் கோவிலை நிர்வகித்து வருவதாக கூறும் சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை மதில் சுவர் எழுப்பி அடைத்து உள்ளதாகவும் இதனால் அந்த கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வருவதோடு இது குறித்து சம்பந்தப்பட்ட அய்யனார் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு அவர்கள் பாதையை விட முடியாது என்றும் மேலும் அவர்களை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மெய்யநாதன் (வயது 37) என்பவர் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் இந்திரன் தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷிடம் புகார் கொடுத்தனர்.
அப்பொழுது தாங்கள் வழிபடும் கோவிலுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தருவதுடன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
அந்த மனுவின் நகலை திருச்சி கலெக்டர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர், திருச்சி எஸ்.பி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், திருவெறும்பூர் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu