திதி கொடுக்க தடை: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வெறிச்சோடியது
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. 'மகாளயம்' என்றால் 'பெரிய கூட்டம் என்று பொருள்'. மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
பொதுவாக ஒவ்வோர் அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் யமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்குச் சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மகாளய பட்சமான பதினைந்து நாள்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்து இருப்பதாக நம்பிக்கை.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நமது நம்பிக்கை.
அந்தவகையில் தமிழக அரசு சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. இதில் முக்கிய நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முக்கிய விசேஷ தினங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்இன்று திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கவும், திதி கொடுக்கவும் அதிகமாக மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் சிவராசு தடை விதித்துள்ளார்.
அம்மா மண்டபம் பகுதியில் யாரும் உள்ளே செல்ல முடியாமல் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி படித்துறை வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu