ஆடிப்பெருக்கன்றே 3 வது முறை களையிழப்பு; வெறிச்சோடியது அம்மாமண்டபம் படித்துறை
வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராமப் பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள்.
ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை என்பதால் நதிக்கரை, ஆற்றங்கரைகளில் பண்டிகைகள் களைகட்டவில்லை.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா ஜீவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. இன்றைய சூழ்நிலையில் நம்மால் ஆற்றங்கரை, நதிக்கரை, அருவிக்கரைகளுக்கு போகமுடியாவிட்டாலும் வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து படையலிட்டு காவிரி அன்னையை வீட்டு வாசலில் இருந்தே வணங்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஆடிப்பெருக்கு அன்று திருச்சியில் அனுமதி வழங்காத நிலையில் தொடர்ந்து இந்த வருடமும் ஆடிப்பெருக்கன்று பொதுமக்களுக்கு ஆடிப்பெருக்கு கொண்டாட அனுமதி வழங்காத நிலை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஒடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படித்துறைகளில் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருபுறம் ஆடிப்பெருக்கை பொதுமக்கள் வீட்டிலேயே கொண்டாடிவரும் நிலையில், அதிகரித்துவரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் தான் ஓரளவு இந்த கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu