ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை இடிந்து விழுந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

ஸ்ரீரங்கம்  கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை இடிந்து விழுந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி
X

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை இடிந்து விழுந்தது 

கடந்த 25ம் தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.

பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதில் கடந்த 25ம் தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும், மேற்கூரை பூச்சுகளும், அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் இருந்தது.

இந்த பகுதியை பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். கார்கள், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் அவ்வழியாக சென்று வந்தன. இந்த நிலையில் தற்காலிகமாக கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒருவித அச்சத்துடன் அந்த பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்தன. நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இடிந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.


இடிந்து கீழே விழுந்த செங்கல் மற்றும் கொடுங்கையின் இடிபாடுகளையும், சேதம் அடைந்த மின் கம்பத்தையும் அங்கிருந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரத்தில் உள்ள கொடுங்கை இடிந்து விழுந்தது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் கூறும் போது, ரூ.98 லட்சம் செலவில் கொடுங்கை சரி செய்து கோபுரத்தை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil