மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?
திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் சமீபகாலமாக சட்டவிரோதமாக அனுமதியின்றி இருசக்கர வாகனங்கில் மூட்டை, மூட்டையாக மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது.
காவிரி கரையோரம் உள்ள கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் தொடங்கும் மணல் கடத்தல் அதிகாலை வரை நீடிக்கிறது என்று அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதில் திருப்பராய்த்துறை, பெருகமணி, முத்தரசநல்லூர் ஆகிய இடங்களில் ஆற்றுக்குள்ளே டூவீலர் செல்ல வழி இருப்பதால் மணல் மூட்டைகளை கட்டி அதில் ஏற்றி கடத்தி செல்கின்றனர் என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.
இதில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கும் அதிகமான அளவில் சிமெண்ட் மூட்டைகளில் மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் கடத்தல் பொதுப்பணித்துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர் அந்த பகுதி மக்கள்.
இது சில்லறை வியாபாரம் தானாம். நமக்கு தான் பெரிய பிசினஸ் இருக்கிறதே என அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஹை-வே பேட்ரோல் போலீசார் பல நேரம் இதை கண்டுகொள்வதில்லை. சமீபகாலமாக மணல் கடத்தல் கும்பல் வழிபறிகளிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இரவு அல்லது அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையோரத்தில் சந்திக்கும் ரகசிய ஜோடிகளை குறிவைத்து இந்த வழிப்பறி கும்பல் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளது.
மேலும் ஆற்றில் குளிக்க செல்பவர்களின் உடைகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன், பணம் போன்றவற்றையும் திருடி சென்று விடுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர முன்வராததால் இவர்கள் மணல் கடத்தலோடு சேர்த்து வழிப்பறியையும் தடை இல்லாமல் செய்து வருகின்றனர்களாம். ஆரம்பத்தில் இருந்தே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்த மணல் கடத்தலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அவர்களாலும் தற்போது கடத்தல் கும்பல் வழிபறியில் ஈடுபடுவதை கண்டிக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது. போலீசார் கண்டு கொள்வார்களா? என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu