ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  பரமபதவாசல் திறப்பு
X

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை பரமபதவாசல் வழியாக பிரவேசித்த ஸ்ரீ அரங்கநாத சுவாமி.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் இன்று சனிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

இந்துகளின் விரத வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி, இந்த வைகுண்ட ஏகாதசி வைபவம் சனிக்கிழமை அனைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது

பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உற்சவம் கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பொதுவாக பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இவ்விழாவில் 20 நாள் விழாவாக நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராப்பத்து என்றும் அழைப்படுகிறது.

டிசம்பர் 13 அன்று தொடங்கிய பகல்பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார்.

பகல்பத்து திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பெருமாள், இரவு 9 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

திருப்பள்ளியெழுச்சி நடைபெற்ற பின்னர் ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சிம்ம கதியில் புறப்பட்ட நம்பெருமாள் வலதுபுற மதில்படி வழியாக ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.

அங்கு நம்பெருமாளுக்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை வாசித்தனர். இதைத் தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்களின் ரங்கா ரங்கா முழக்கத்துடன் காலை 4 மணிக்கு பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழக முழுவதிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture