திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு. 

திருச்சி திருவானைக்காவலில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 62). இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றார்.

நேற்று பகல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி, வளையல் உள்பட 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. பீரோவில் தனியாக வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் மட்டும் திருட்டு போகாமல் அப்படியே இருந்துள்ளது.

இது குறித்து, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல் ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தெருவின் திருப்பம் வரை சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
ai marketing future