கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புகிறேன்... திருச்சியில் நளினி பேட்டி...

கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புகிறேன்... திருச்சியில் நளினி பேட்டி...
X

திருச்சியில் பேட்டியளித்த நளினி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முருகன் நளினியின் கணவர் ஆவார்.

சுமார் 30 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்த நிலையில், பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலையானார். அதே விதிமுறைகளை பின்பற்றி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நளினி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர். இதில், நளினியும், ரவிச்சந்திரனும் அவர்களது சொந்த வீட்டுக்கு சென்றனர். முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறப்பு முகாமில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த நிலையில், முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் முருகனின் மனைவி நளினி, ஜெயக்குமார் மனைவி சாந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர்.

இதையெடுத்து, சிறப்பு முகாம் வாயிலில் நளினி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முகாமில் உள்ளவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் அவர்களை விரைவாக முகாமில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னம் முடிவு எடுக்கவில்லை.

நமக்கு நல்லது செய்தவர்களை சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை அதனால் தான் முதலமைச்சரை சந்திக்கவில்லை. முதலமைச்சர் எங்களுக்கானதை பார்த்து கொள்வார். 16 ஆண்டுகள் என் மகளை பிரிந்துள்ளேன் லண்டன் சென்று அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். முகாம் என்பது தற்போது சிறை போல் உள்ளது. அதனால் அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும்.

சில மக்கள் எங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவள். என் தாய்க்கு பெயர் வைத்ததே காந்தி தான். இந்திரா காந்தி இறந்த போதும் சரி, ராஜீவ் காந்தி இறந்த போதும் சரி நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம்.

அப்போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. என்னை ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தியதை ஏற்று கொள்ள முடியவில்லை. அந்த பழியில் இருந்து மீண்டு வர வேண்டும். இந்த வழக்கில் இருந்து விடுதலையானால் கோயில்களுக்கு நேர்த்திகடன் செய்ய வேண்டி உள்ளேன். அதை செய்வேன்.

ராஜீவ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது என எனக்கு தெரியாது. வெளிநாடு செல்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறோம் என நளினி தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!