திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
பைல் படம்
ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகிேயார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது ரூ.200 அபராதம் விதித்தும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா்களை சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து, 1,700 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெளியே கொண்டுவந்து தனி நபர் மூலம் ரூ. 2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஸ்ணன் உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு பணியாற்றி வரும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உறுதியானதால் , ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் சுமதி அவருக்கு உடந்தையாக இருந்த ஏட்டு ராஜா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஸ்ணன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu