மே 2 தமிழகத்திற்கு புதிய விடியலாக அமையும்-ஸ்டாலின்

மே 2 தமிழகத்திற்கு புதிய விடியலாக அமையும்-ஸ்டாலின்
X

மே 2ஆம் தேதி தமிழகத்திற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமைய உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பொதுக்கூட்டம் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது திமுக ஆட்சியில் இருந்த போது அமைத்த அனைத்து கட்டமைப்புகளையும் அதிமுக ஆட்சியினர் அழித்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை நாசமாக்கி விட்டனர். இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாளாகும். மே 2ஆம் தேதி தமிழகத்திற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமைய உள்ளது.

எனது கனவு திட்டத்தை தற்போது திருச்சியில் அறிவிக்கிறேன். தொலைநோக்கு திட்டமாக 7 திட்டங்கள் இங்கே அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் 7 துறைகள் சீரமைக்கப்பட உள்ளது. 10 ஆண்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். அதற்காக முதலாவதாக பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்.

புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படும். தற்போதுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பாதியாக குறைக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி மக்கள் 10 ஆண்டுகளில் மீட்கப்படுவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். தமிழகத்தில் வேளாண் சாகுபடி அளவு 75 சதவீதமாக உயர்த்தப்படும்.

கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். சமூகநீதி திட்டத்தின் கீழ் மாதம்தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பதலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள். விரைவில் அமைய உள்ள திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொலைநோக்கு திட்டங்களும் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்படும். தமிழகம் எழுச்சி பெற வேண்டும். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. மக்களின் ஆதரவுடன் திமுக அரசு அமையும். இது அனைவரது அரசாங்கமாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திமுகவினர் மக்களிடம் கொண்டு சேர்த்தால் திமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.

Tags

Next Story
பா.ம.க. கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் ரகசிய பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!