திருச்சியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்! தீவிர விசாரணை
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு, எட்டரை பகுதியில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் வீட்டில் சந்தேகத்தின் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து, அவரது வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வீடு, எட்டரை ஊராட்சி தலைவர் திவ்யா அன்பரசன் வீடு என்பதும், இவர் அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி அன்பரசனின் வீடு என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்திருந்தார்? தேர்தல் பணப்பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அன்பரசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தெரிந்து கொண்ட கட்சியின், வழக்கறிஞர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டின் முன்பு கூடினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu