முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு
1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக ஜானகிராமன் என்பவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும் அப்போதைய மதிப்பில் 32 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுற்ற நிலையில், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu