திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்த பொதுமக்கள்!

திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்த பொதுமக்கள்!
X

திருச்செந்தூர் அன்புநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்.

திருச்செந்தூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அன்புநகர் பகுதி மக்கள் அசத்தி உள்ளனர்.

உலகம் முழுவதும் நிகழும் குற்றச்செயல்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றச்செயல்கள் நிகழாமல் தடுக்கவும் மிகவும் உதவியாக இருப்பது மூன்றாவது கண் என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமிராக்கள்தான் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதிகளில் தொடர்ந்து தங்க நகைகள் கொள்ளை, இருசக்கர வாகனங்கள் திருட்டு என தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.


மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பற்றி எந்தத் தகவலும் கிடைக்காமல் தடையவியல் நிபுணர்களும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு சம்பவத்தை மூன்றாவது கண் என்று சொல்லப்படும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் எளிதாக அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர் நகராட்சி இரண்டாவது வார்டுக்குட்பட்ட அன்பு நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, அந்தப் பகுதித்தியில் வசிக்கக்கூடிய 60 குடும்பத்தினரும் தங்களுக்குள் நிதி திரட்டி ரூ. 3.20 லட்சம் மதிப்பில் 22 கண்காணிப்பு கேமராக்கள் என அன்பு நகரிலுள்ள அனைத்து பகுதிகளிலும் அமைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், திருச்செந்தூர் உட்கொட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ், நகராட்சித் தலைவர் சிவா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்தப் பகுதி மக்களின் இந்த முயற்சியை டிஎஸ்பி வசந்த ராஜ் பாராட்டினார்.

அப்போது பல்வேறு பகுதிகளிலும் நடக்கக்கூடிய குற்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளதாக டிஎஸ்பி வசந்தராஜ் தெரிவித்தார். உதாரணமாக, சில குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்காணிப்பு கேமராக்களின் மூலமே கண்டுபிடித்து கொள்ளையடிக்கப் பொருட்களை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்புநகர் பகுதியில் பொதுமக்கள் முயற்சியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காவல்துறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் இது போன்று திருச்செந்தூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!