போதைப்பொருள் கடத்தல்- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது-கியூ பிரிவு போலீசார் அதிரடி

போதைப்பொருள் கடத்தல்- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது-கியூ பிரிவு போலீசார் அதிரடி
X

இங்கிலாந்து நாட்டின் லிட்டில்ஹேம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜொனதன் தோர்ன் 

தூத்துக்குடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனதன் தோர்ன் என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த வெளிநாட்டவரை தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், இங்கிலாந்து நாட்டின் லிட்டில்ஹேம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜொனதன் தோர்ன் (வயது 47) என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரில் இருந்து மதுரை வந்த இவர், பின் சாலை வழியாக தூத்துக்குடி வந்துள்ளார்.

தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. பிடிபட்ட ஜொனதன் மீது மும்பை காவல் நிலையத்தில் பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், படகு மூலம் இலங்கைக்கு சென்று போதைப்பொருட்களை வாங்குவதற்காக தூத்துக்குடி வந்திருந்ததும், இதற்காக வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியை சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவரின் உதவியை நாடுவதற்காக அவர் ஹோட்டலில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தனியார் ஹோட்டலில் ஜொனாதன் தங்கியிருந்த அறையிலிருந்து இரண்டு விலையுயர்ந்த செல்போன்கள், இந்திய பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், துபாய் நாட்டில் செல்லத்தக்க வகை திராம்ஸ், இலங்கை, நேபாளம், வங்காள தேச நாட்டு பணம் இதுதவிர இங்கிலாந்து நாட்டின் இரண்டு பாஸ்போர்ட்டு, இந்திய நாட்டு பாஸ்போர்ட்டு ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்திய நாட்டின் கோவா கடற்கரை வழியாக சர்வதேச நாடுகளுக்கு போதைபொருள் கடத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவாவை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இந்திய நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜொனாதன் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் வெப்ப பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்ற ஜூடிசியல் மாஜிஸ்ரேட்டு ராஜகுமரேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags

Next Story
பராசிட்டமோல் அதிகப்படியாக பயன்படுத்தும் போது எதிர்பாராத ஆபத்துகள் – புதிய ஆய்வு எச்சரிக்கைகள்