தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்

தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்
X

கொரோனா ஊரடங்கால் வேலை மற்றும் வருமானம் இழந்து தவிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா எனும் கொடிய நோய் ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தொழில் துறை மட்டுமின்றி கல்வித்துறையும் பாதிப்பை சந்தித்துள்ளது.

அரசு பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்காததால் இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து வாழ்க்கை நடத்த முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு முடிந்து தொடர்ந்து இயங்க அரசு அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சில மாதங்கள் ஊதியம் வழங்கின.

ஆனால் எதிர்பார்த்தபடி பள்ளிகள் முழுமையாக இயங்க அரசாணை எதுவும் வராத நிலையில் ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்ட பிறகு பள்ளிக்கு வந்தால் போதும் எனக்கூறி கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

உயர் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி சில ஆசிரியர்களுக்கு மட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் வேலை மற்றும் ஊதியம் வழங்கி வருகிறது.

கடந்த ஒரு ஆண்டாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் வேலையில்லாமல், வருமானமின்றி வீடுகளில் வறுமையுடன் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் மளிகை கடைகள், 100 நாள் வேலைகளிலும், ஓட்டல்களிலும் வேலைக்கு சென்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்காத நிலையிலும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வேலையிழந்து, வருமானம் இழந்து தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தவிக்கும் நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்ற கேள்வியுடன் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

வருவாய் இழந்து தவிக்கும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனங்கள் திறக்கும் வரை தமிழக அரசு நிதி உதவி வழங்கி வாழ்வாதாரம் காக்க உதவ வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசின் நிதி உதவி வழங்க வேண்டும், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!