தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பரப்புரை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கொரோனாத் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பரப்புரையை அரசு நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக சன்னாநல்லூர் வர்த்தக சங்கத் தலைவர் சங்கர் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் விஜயபூபாலன் ஆகியோர் வியாழக்கிழமை விடுத்துள்ளச் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
சன்னாநல்லூர் வர்த்தகச் சங்கம் மற்றும் நன்னிலம் வட்டாரச் சுகாதார துறை இணைந்து, சில தினங்களுக்கு முன்பு நூறு பேருக்குத் தடுப்பூசி போடும் திட்டத்துடன் கொரோனாத் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கிணங்க, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலர் இறந்த செய்தி காரணமாக, தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என இணையதளம் மூலம் மக்களிடையே வெகு வேகமாக பரவியது.
பொது மக்கள் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என அரசு வலியுறுத்தியும் கூட, மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் சந்தேகம் காரணமாகத் தடுப்பூசிப் போடுவதற்கு முன் பதிவு செய்தவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வரவில்லை.
எனவே தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்ற நேரத்தில், தடுப்பூசி பற்றிய அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றி நிலவி வருகின்ற அச்சத்தினையும், சந்தேகத்தையும் போக்குகின்ற வகையில், விழிப்புணர்வு பரப்புரையை நடத்துவதன் மூலம் மட்டுமே, பொதுமக்கள் அச்சமின்றியும், ஆர்வத்துடனும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள், அப்போதுதான் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த முடியுமென கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu