இனிமேலாவது பாடம் கற்றுக்கொள்வாரா எடப்பாடி
பைல் படம்
கடந்த சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக சின்னம் தோல்வி அடைந்து இருந்தாலும் நல்ல வாக்கு வங்கியை பெற்று இருந்தது. அதிமுக சின்னத்தில் இங்கே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார். ஆனால் இந்த முறை அந்த வாக்குகளை கூட அதிமுக பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
அதாவது 50 ஆயிரம் வாக்குகளை அதிமுக தரப்பு தாண்டுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. ஒற்றை தலைமைக்கு கீழ் போட்டியிட்டும் கூட கே எஸ் தென்னரசு மிகப்பெரிய சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். எடப்பாடியின் கோட்டை கொங்கிலேயே அவர் சரிந்து உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் அல்லாத மற்ற ஜாதியினர் எடப்பாடி தரப்பை புறக்கணித்து உள்ளனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்பே கொங்கில் ஓ பன்னீர்செல்வம் இல்லாத காரணத்தால் எடப்பாடி சரிவார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதில் எடப்பாடி கொங்கில் வெற்றிபெற ஓ பன்னீர்செல்வம் முக்கிய காரணம். ஓ பன்னீர்செல்வம் இருப்பதால்தான் கொங்கு வேளாள கவுண்டர்கள் இல்லாத மற்ற ஜாதியினரும் எடப்பாடிக்கு வாக்களிப்பார்கள். இல்லையென்றால் கொங்கு வேளாள கவுண்டர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். அதை வைத்து எடப்பாடி கொங்கில் பெரிதாக வெற்றிபெற முடியாது என்று, ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது அதை நிரூபிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான கொங்கிலேயே பெரிய சரிவை சந்தித்து இருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பெற்றதை விட குறைவான வாக்குகளை பெற்றுத்தான் அதிமுக தோல்வி அடையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம் தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள் தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் இல்லாத காரணத்தால் கவுண்டர்கள் தவிர வேறு யாரும் எடப்பாடிக்கு வாக்களிக்கவில்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி இனியேனும் இறங்கி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் பேசிய போது.. எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் கிடைத்த பின்னரும், அவர் தரப்பு தேர்தலில் வெல்லவில்லை, அவர் தனியாக தலைவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் தனியாக இருந்தும் கூட அவர் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. அவர் இனிமேலாவது இறங்கி வர வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாக்குகள் சிதறாமல் ஒன்றாக இருக்கும், என்று தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu