பாஜக வின் துணிச்சலுக்கு காரணம் என்ன?

பாஜக வின் துணிச்சலுக்கு காரணம் என்ன?
X
பாரளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமித் ஷாவின் வருகையினை தொடர்ந்து தமிழக அரசியலில் கடும் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது

திமுகவும் காங்கிரசும் உறுதி செய்யப்பட்ட கூட்டணி. இருவருக்கும் வேறு வழியே இல்லை, காங்கிரஸ் கொஞ்சம் மேலே எழ முயற்சிக்கும் தருணம். ஆனாலும் திமுகவினை விடாது, அதே நேரம் திமுகவும் 5 சீட்டுக்கு மேல் கொடுக்க சம்மதிக்காது, எப்படியோ பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் மற்றபடி மாற்றமில்லை. காரணம் சவால் எடுக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

இங்கே எதிர் தரப்பு யார் என்பதுதான் இப்போதைய சிக்கல். அதிமுகவினை வளர்த்து விட அல்லது மூழ்காமல் காக்க பாஜக தயாராக இல்லை. தனக்கு ஒன்றுமில்லாத மாநிலத்தில் திமுக எனும் யானைக்காக அதிமுக எனும் நரியினை தூக்கி சுமக்க அவர்கள் தயாரில்லை என்பது சமீபகாலமாக வெளியில் தெரிகின்றது. அதிமுகவின் கூட்டணியினை தவிர்த்தால் திமுகவுக்கு தான் சாதகம் எனும் வழக்கமான பம்மாத்து வார்த்தையை பாஜக தலைமை ரசிக்கவில்லை. திமுகவுக்கு சாதகம் என அதிமுகவினை வளர்த்து நாம் நாசமாய் போவதா? திமுகவுக்கு சாதகமா இல்லையா என்பதல்ல விஷயம்.

நாம் வளர்கின்றோமா இல்லையா என்பதுதான் விஷயம் என பாஜக தெளிவாக ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். எவ்வளவு காலமானாலும் தனித்து வளர்வோம் என அவர்களின் முடிவு செய்திருப்பதாக தெரிகின்றது. அதிமுகவில் பிரபலமான முகங்கள் இனி இல்லை. அக்கட்சி இனி வெற்றிபேற போவதில்லை. அவர்களின் காலம் முடிந்து விட்டது. பொறுத்தது பொறுத்தோம். இன்னும் சிலகாலம் பொறுத்தால் அவர்களாகவே கரைவார்கள். அதுவரை காத்திருப்போம். திமுகவுக்கு அஞ்சி அதிமுவினை வளர்த்து விட்டு நிரந்தரமாக முடங்குவதை விட கொஞ்சம் தாமதிப்பது நல்லது என முடிவெடுத்து விட்டார்கள்.

பாஜக தேசிய கட்சி, என்ன தான் திமுக முட்டி மோதினாலும் பாஜகவின் அருகில் கூட வரமுடியாது. இரண்டு ஆண்டு ஆட்சியில் என்ன தான் திமுக போர்முரசு கொட்டினாலும் மோடி வந்தவுடன் எப்படி வளைகின்றார்கள். டெல்லியில் எப்படி காவடி எடுக்கின்றார்கள் என்பதெல்லாம் உலகறிந்தது. இதனால் திமுகவினை அவர்கள் பெரும் பொருட்டாக கருதவில்லை. எதிர்கட்சி என ஒன்று எப்போதும் அவசியம். அதை காட்டித்தான் தமிழகத்தில் வளரமுடியும். அங்கே தானும் வளரமாட்டேன் உன்னையும் விடமாட்டேன். என்னை முதுகில் ஏற்றிகொண்டுதான் நீ வளரவேண்டும் என அதிமுக சொல்வதை அவர்கள் ரசிக்கவில்லை.

கால்கள் இழந்து கிடக்கும் அதிமுகவினை தூக்கி நிறுத்த பாஜகவுக்கு அவசியமில்லை. அது சரியுமல்ல. இங்கே நாம் வளர வேண்டும். அதற்கு காலம் ஆனாலும் பரவாயில்லை. அதற்காக தோற்றுகொண்டும் அழிந்து கொண்டும் இருக்கும் அதிமுகவுடன் ஒட்டி நாசமாய் போக கூடாது என்பது இப்போதைய பாஜக நிலைப்பாடு. அது பல இடங்களில் தெரிந்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

அண்ணாமலையினை தாண்டி பாஜக மேலிடத்தை வழக்கமான லாபிகளால் திமுக அதிமுகவினால் நெருங்க முடியவில்லை. இதனால் அவர் அற்ற தமிழக பாஜக அவசியம் என கருதி பலரை தூண்டி விடுகின்றார்கள். ஆனால் மோடியும் அமித்ஷாவும் அண்ணாமலை தான் தென்னிந்திய பாஜக என அடித்து சொல்கின்றார்கள். இப்படி அதிமுக இனி தங்களுக்கு எதிர்காலமில்லை. கடைசி முயற்சியாக பாஜகவிடம் ஒட்டி மேலேழலாம் எனும் நம்பிக்கையும் பொய்த்து விட்டதில் கொஞ்சம் ஆவேசமாக தான் இருக்கிறது.

அரசியலில் இனி எதிர்காலமில்லை என கத்தும் கும்பல் அதிகமாகத் தான் கத்தும். அதுவும் மைத்ரேயனை தொடர்ந்து பலர் பாஜக பக்கம் வரலாம் எனும் போது, இனி நமக்கு தலைவன் இல்லை. எதிர்காலமில்லை. வெற்றி இல்லை எனும் போது அதிமுகவினர் அலறத்தான் செய்வார்கள்.

கருணாநிதி சர்சைக்குரியவர் சந்தேகமில்லை. ஆனால் அரசியலில் கொஞ்சம் ஆழமான அறிவு கொண்டவர், 1970களில் எம்ஜிஆர் காமராஜரோடு இணைந்திருந்தால் திமுக அழிந்து போயிருக்கும். அது காமராஜரின் குழப்பத்தால் நடக்கவில்லை என்பது அவருக்கான ஆறுதல்.

அதில் தப்பிய கருணாநிதி அதிமுகவினை தன்னோடு இணைக்க பெரும் முயற்சி எடுத்தார், ஆனால் எம்ஜிஆர் நழுவினார். "அதிமுக ஒரு தனிமனித கவர்ச்சி கட்சி, அந்த முகத்தோடு அது அழியும்" என முதலில் சொன்னவர் கருணாநிதி தான். அதிமுகவினை தன்னோடு இழுக்க வேண்டும் எனும் கணக்கு அவரிடம் இருந்தது. 1987ல் அதற்கு அவர் தயாரான போது ஜெயலலிதா பெரிதாக எழுந்து தடுத்தார்.

அந்நேரம் ராஜிவின் காங்கிரஸ் அதிமுகவினை கரைக்க முயன்றது நிஜம். ஆனால் ஜெயாவின் எழுச்சி தடுத்தது. இப்படி எம்ஜிஆர் மரணத்தோடு கரைந்து காங்கிரஸா, திமுகவா என கலந்து இல்லாமல் போயிருக்க வேண்டிய கட்சி அது. ராஜீவின் மரணம், காங்கிரசின் வீழ்ச்சி, 1991ன் குழப்பமான காலகட்டம் என பலவற்றால் அது வளர்தது, சசிகலா குடும்பம் கோடீஸ்வர குடும்பமானது. 1987ம் ஆண்டின் நிலை 2016லும் வந்தது. ஆனால் ஆட்சியில் இருந்தார்கள். மோடி அரசிடம் ஒரு காமராஜர் சாயல் உண்டு அதாவது கட்சியை தாண்டி நாட்டை நேசிப்பார்கள்.

அரசியல் தத்துவப்படி ஜெயலலிதா இல்லாத 2016ம் ஆண்டே அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். அது குழப்பமான அரசியலை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும். மோடி அரசு எப்போதும் வீண் குழப்பங்களை விரும்பாத அரசு. அது தமிழக அதிமுகவினை ஆளவிட்டது, பழனிச்சாமிக்கு அதுதான் யோகம். மற்றபடி அவர் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் அல்ல. அவர்கள் ஆட்சி முடிந்ததும் அதிமுகவின் பொற்காலம் முடிந்தது. இனி அவர்களுக்கு வெற்றி இல்லை

இந்நிலையில் தான் அடுத்த களம் தொடங்குகின்றது. இனி அதிமுக தேறாது, கரைகின்றது என முடிவு செய்துவிட்ட பாஜக தனித்து வளரப்பார்க்கின்றது. 1987ல் அதிமுகவின் எதிர்காலம் என்னாகும் என்ற நிலை மறுபடி வருகின்றது. இனி ஜெயா இல்லை. அவர்போல் யாருமில்லை என்பதால் அன்று கருணாநிதி கணித்தபடி இனி அக்கட்சி மெல்ல கரையும். அப்படி கலையும் கூட்டத்தை உள்ளே இழுக்கும் சக்தி இப்போதைக்கு பாஜகவிடம்தான் உண்டு. காரணம் திமுக ரயில் ஹவுஸ்புல், போதாகுறைக்கு தி.மு.க. ரயிலில் கூரையெல்லாம் ஆட்கள். பாஜக என்பது கப்பல் அதுவும் பெரும் கப்பல் எவ்வளவு பேரையும் தாங்கும் கப்பல். தேசம் முழுக்க செல்வாக்குள்ள கப்பல் எனும் வகையில் அதன் பரப்பும் பெரிது. காலியிடமும் பெரிய அளவில் உண்டு. இதனால் அதிமுகவினர் பாஜக பக்கம் வருவார்கள்

மிக முக்கியமான விஷயம் புதிய வாக்காளர்கள், அவர்கள் அதிமுக பக்கம் செல்லப்போவதில்லை, அண்ணாமலை தான் அவர்கள் தேர்வு. இதை எல்லாம் கணித்துத்தான் பாஜக தெம்பாக பேசுகின்றது. இதை எல்லாம் அஞ்சித்தான் அதிமுக அலறுகின்றது.

அமித் ஷா வந்து சென்றதும், அதுவும் அதிமுகவினரை பார்க்காமல் சென்ற பின்னர், அண்ணாமலையின் பேட்டி வருவதெல்லாம் சாதாரணம் அல்ல. அண்ணாமலை அறிந்து தான் பேசினார். ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக அவருக்கு எப்படி பேசவேண்டும் எனும் பயிற்சி உண்டு. அவர் ஒன்றும் செந்தில் பாலாஜி போன்ற அரசியல்வாதி அல்ல. நீங்கள் ஒருவிஷயத்தை கவனிக்கலாம். அது அண்ணாமலையின் நடைபயணம் ஏன் தள்ளிபோகின்றது. அதில் தான் விஷயம் இருக்கின்றது.

திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுவிட்டு அண்ணாமலை மக்கள் முன் செல்ல முடியாது. திமுகவினர் அதிமுகவின் ஊழலை ஏன் அண்ணாமலை பேசவில்லை என்பார்கள். திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடும் நேரம் ஊழலுக்காக தண்டிக்கபட்ட லாலு, சவுதாலா வரிசையில் இருக்கும் ஜெயாவினை பேசாமல் விடமுடியாது. அதைத்தான் இங்கே நாடிபார்த்தார் அண்ணாமலை. மிக சரியான நகர்வு இது. அவர் எதிர்பார்த்தபடியே அதிமுக முகாம் கொதிக்கின்றது. பாஜக இதைத்தான் விரும்பியது.

ஆழமாக கவனியுங்கள். இது ஒரு அழகான நாடகம். ஊழல் புள்ளிகளை எல்லாம் எதிர்தரப்பில் ஒரே அணியாக குவிக்கும் நாடகம். இனி அதிமுகவும் திமுகவும் ஒரே வகையில் வரவேண்டும். தேர்தல் களம் ஊழல் திராவிட கட்சிகளா இல்லை பாஜகவா என மாற வேண்டும். அப்படி மாற்றும் உத்தி அண்ணாமலையிடம் உண்டு. அதனை அவர் மிகவும் சரியாக

செய்திருக்கின்றார். சரியாக கல் வீசி பார்த்திருக்கின்றார். இனி அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்வார். திமுகவின் இரண்டாம் சொத்து குவிப்பு பட்டியலுக்கு பின் அதிமுகவினர்தான் நிச்சயம் வருவார்கள். அதுதான் இப்போது நடக்கின்றது, இன்னும் ஏராளமான காட்சிகள் நடக்கும். தமிழகம் ஒவ்வொன்றாய் காணும். மெல்ல மெல்ல மாற்றங்கள் வரும். அந்த மகாபாரத காட்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. சிசுபாலனா, துரியோதனான் யார் முதலில் அழிக்க எளிதானவன் என்றால் சிசுபாலனே தான், கண்ணன் அதனைத்தான் செய்தான். பேசியே அழிந்தான் சிசுபாலன். அதனால் அழியகூடியவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். முக்கிய காட்சி மகாபாரத்தில் உண்டு. "அர்ஜூனா , எடுத்தவுடன் துரியோதனை வீழ்த்த முடியாது. அவன் பலம் அதிகம். முதலில் எதிர்தரப்பை ஒரே அணிக்கு கொண்டுவா, சிதறி கிடக்கும் எதிரிகளை ஒரே அணியாக்கு. அவர்களை ஓரமாக இருந்து அழித்து கொண்டே இரு’’ என்றான் கண்ணன்.

அதற்கு அர்ஜுனன் கண்ணா அப்படியானால் துரியோதனின் ஆயுள் நீளுமே. நீளட்டும், அவனுக்கு குறித்த காலம் வரை நீளட்டும். அதைபற்றி நீ ஏன் யோசிக்கின்றாய், அவனுக்கு துணயாக நிற்கும் பலசாலிகளை ஒவ்வொருவராக ஒழிக்கும் வரை அவன் வாழத்தான் செய்வான். அது அவனுக்கு கிடைத்த வரம், அதுவரை வாழட்டும். ஆனால் இனி எழமுடியாதபடி அழியபோகின்றவன் கொஞ்ச நாளைக்கு கூடுதலாக வாழ்வதில் உனக்கேன் ஆட்சேபனை அர்ஜுனா" என்றான் கண்ணன். தமிழகத்தில் பாஜக அண்ணாமலை உருவத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!