ஈரோடு இடைத்தேர்தல் உணர்த்தும் செய்தி என்ன..?
இடைத்தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியில் பேட்டி அளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த வெற்றியானது சொல்லப்படாத உண்மைகள் பலவற்றை நமக்கு மெளனமாக உணர்த்துகிறது..! இந்த வெற்றிக்காக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களா..‘’இது 21 மாத திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்’’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சபாஷ், திராவிட மாடலுக்கு இதை விட மோசமாக, எதிர்கட்சிகளால் கூட உதாரணம் காட்ட முடியாது. ஒரு சாதாரண இடைத் தேர்தல் தானே. நம்முடைய 21 மாத ஆட்சியை மக்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள் எனப் பார்த்து விடுவோம் என இந்த தேர்தலை உங்களால் ஏன் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை.
அத்தனை அமைச்சர்களும் அந்த தொகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக டேரா போட்டு தங்கி தெருத் தெருவாக அலைந்தார்கள். 21 மாதங்களாக அலட்சியம் காட்டி விட்டு, தற்போது 20 நாட்களில் அதிரடியாக சட்ட வரம்புகளை மீறி, அந்த தொகுதிக்கு சாலை வசதி, குடி தண்ணீர் குழாய் பதிப்பித்தல்.. உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றப்பட்டன. இவை யாவும் ஆத்மார்த்தமான சேவையல்ல, ஆதாயம் தேடிய சேவைகள் தானே. இது தவிர, தொகுதி நெசவாளர்களுக்கு மின்சாரக் கட்டணம் குறைப்பு, தொகுதி ஆவின் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை… என வரம்பு மீறல்கள் தொடர்ந்தன. இறுதியாக முதலமைச்சரே தொகுதிக்கு வந்து ”மாதாமாதம் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்” என உறுதி மொழி கூறியதும் நடந்தேறியது.
ஆளும் திமுகவின் அத்தனை அதிகார துஷ்பிரயோகங்களையும், ஒரு மெளனப் பார்வையாளராக தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்ததும், 700 க்கு மேற்பட்ட புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பாஜகவின் தயவின்றி திமுகவுக்கு இவை சாத்தியப்பட்டு இருக்காது என்பது பாமரனுக்கும் தெரியுமே. இந்த நன்றிக் கடனை தெரிவிக்கத் தானா உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தார்? அதிமுகவும் தன் பங்கிற்கு பணத்தை தண்ணீராக இறைத்து தான் இந்த அளவுக்கேனும் ஓட்டுக்களை வாங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரை சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளைக் கூட இந்த தேர்தலில் அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், குறைவான வாக்குகள் பெற்று இருந்தாலும், பணம் எதுவும் தராமல் அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் என்பதால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நாம் முற்றிலும் இழக்காத வண்ணம் நம்பிக்கை தருகின்றன. அதிமுகவோ, நாம் தமிழரோ.. ஆனாலும் கூட, அதிகார மையங்களின் அழுத்ததை மீறி போடப்பட்ட வாக்குகளை அவை பெற்றுள்ளன என்ற தன்மையில் தான் நாம் அந்த வாக்குகளை மதிப்பிட வேண்டியுள்ளது.
மற்றபடி இந்த தேர்தலில் தேமுதிக வாங்கிய ஓட்டுகள் ஒரு சுயேட்சை வாங்கும் ஓட்டைக் காட்டிலும் குறைவானது என்ற வகையில் அந்த கட்சிக்கான தேவையை தமிழக மக்கள் நிர்தாட்சண்யமின்றி புறக்கணித்து விட்டனர் என்றே அர்த்தமாகும். ஆக, இனியும் அந்தக் கட்சி உயிர்ப்பித்திருக்க அவசியமில்லை என்பதை மக்கள் உணர்த்தி விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu