நாங்களா குடிகாரர்கள்...! தமிழக இளைஞர்கள் ஆவேசம்...!

நாங்களா குடிகாரர்கள்...! தமிழக இளைஞர்கள் ஆவேசம்...!

தேனி மாவட்டம், தேவாரத்தில் ஒரு விசேஷ வீட்டில் சமையல் பணிகளை முடித்து பல ஆயிரம் சம்பாதித்த கையோடு, போட்டோவிற்கு ஹாயாக போஸ் தரும் தேனியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள்.

தரமான, நம்பிக்கையான உழைப்பு வேண்டுமானால் அதற்கேற்ப சம்பளமும் வழங்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் சவால் விட்டுள்ளனர்

தமிழகத்தின் பெரிய பிரச்னை வடநாட்டுக்காரன் வேலை வாய்ப்புகளை பறித்துக் கொண்டான் என்பது தான். இப்படி தமிழகத்தின் பல தொழிலதிபர்கள் புலம்பி வருகின்றனர். ஆமாம் இதனை வருத்தம் எனக்கூட பதிவிட முடியாது. புலம்பல் என்று தான் பதிவிட வேண்டும். இந்த பிரச்னை மனதை குடைந்து கொண்டே தான் இருந்தது. எனவே இந்த செய்தி எழுத சற்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் கூட ஏற்பட்டது.

ஒட்டுமொத்த தமிழகமும் குடியில் வீழ்ந்து விட்டதை போலவும், வடநாட்டுக்காரன் குடிப்பதில்லை என்பது போலவும், தமிழக தொழில் அதிபர்கள் சம்பளத்தை அள்ளிக் கொடுப்பதை போலவும், அதனை விரும்பாமல், தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கில் கவிழ்ந்து கிடப்பதை போலவும் ஒரு மாயத்தோற்றத்தை தமிழக தொழிலதிபர்கள் உருவாக்கி வருகின்றனர். சில யூடியூபர்களும் இது போன்ற தொழிலதிபர்களை பேட்டி எடுத்து செய்தி வெளியிடுகின்றனர். உண்மையில் வடநாட்டுக்காரன் குடிப்பது மட்டுமின்றி, வேறு பல கெட்ட செயல்களையும் செய்கிறான். இவர்கள் ஆக்கிரமிப்பதன் வலியை தமிழகம் விரைவில் அனுபவிக்கப் போகிறது என்பதில் உள்ள உண்மையினை மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

ஆனால் அதற்கு நாங்களா காரணம்? தொழிலதிபர்கள் தான் காரணம் என தமிழக இளைஞர்கள் பதிலடி தருகின்றனர். தமிழகத்தில் தற்போது படித்த இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து விட்டது. படிப்பில் கெட்டிக்காரத்தனமாக இருந்த இளைஞர்களை படித்து முடித்ததும், தினமும் 300 ரூபாய், 500 ரூபாய் சம்பளத்திற்காக 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்யச் சொன்னால் எப்படி.

தொழிலதிபர்களிடம் குறைந்த சம்பளம் கொடுத்து தரமான வேலை வாங்க வேண்டும், நாம் அதிகளவு சம்பாதித்து குவிக்க வேண்டும். தான் சம்பாதிக்க மற்றவர்கள் கடும் உழைப்பினை வழங்க வேண்டும் என்ற சிந்தனை தான் உள்ளது. பணம் உள்ளது என்பதை தவிர்த்து வேறு என்ன அவர்களிடம் அதிசய திறமை உள்ளது. பணம் உள்ளதால் முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்கின்றனர். அவர்கள் கோடி, கோடியாக சம்பாதிக்க நாங்கள் எங்கள் எதிர்காலத்தை அடமானம் வைத்து, மிக, மிக, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்தில் இன்று ஒரு கிலோ மாதுளம்பழம் (தரமான பழம்) 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கொய்யாப்பழம் கிலோ 100 ரூபாயினை தாண்டி விட்டது. ஆப்பிள் விலையும் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாங்கள் ஒரு நாள் முழுக்க வேலை செய்து ஒரு கிலோ ஆப்பிள் வாங்க வேண்டுமா? இந்த அல்வா எல்லாம் எங்களிடம் வேண்டாம். நாங்களும் மணிக்கணக்கில் சம்பளம் வாங்கத்தயார்? என்ன வேலை என்று சொல்லுங்கள் செய்ய தயாராக உள்ளோம் என்று சவால் விடுகின்றனர்.

இப்படி இவர்கள் வெறும் வாய்ச்சவடால் எல்லாம் விடவில்லை. செயலிலும் இறங்கி விட்டனர். விடுமுறை நாட்களில் வரும் முகூர்த்த வீடுகளில் சமையலுக்கு செல்லும் அளவுக்கு இறங்கி விட்டனர். ஆமாம் முதல் நாள் மதியம் 2 மணிக்கு ஆஜராக வேண்டும். மாலை உணவு, இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு என நான்கு நேரங்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு குறைந்த பட்சம் 300 பேர் முதல் 500 பேர் வரை பரிமாற வேண்டும். மறுநாள் மதியம் 2 மணிக்கு பணி முடிந்து விடும். இந்த 24 மணி நேரப்பணிக்கு குறைந்த பட்சம் ஒரு இளைஞருக்கு 2000ம் ரூபாய் முதல் 3000ம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது.

மாதத்திற்கு மூன்று முகூர்த்த நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும், குறைந்த பட்சம் 10000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்து விடும். நாங்கள் படித்துக் கொண்டே இந்த பணிகளை பார்த்து சம்பாதித்து வீட்டிற்கும் தருகிறோம். ஆனால் தமிழக முதலாளிகள் 30 நாட்கள் வேலை வாங்கிக் கொண்டு மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இருந்து தொடங்கி தகுதிக்கு ஏற்ப சிறிது, சிறிதாக அதிகரித்து அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவார்கள். தினமும் குறைந்த பட்சம் 11 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எது பெஸ்ட் என நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த குறைந்த மாதச்சம்பளம் வடமாநிலத்து இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் சரியாக வரும். எங்களுக்கு சரிப்படாது. எங்களுக்கு மாதச்சம்பளம் குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும்.

இரண்டே ஆண்டில் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வரை உயர வேண்டும். இந்த அளவு வருவாய் இருந்தால் மட்டுமே எங்கள் படிப்பிற்கும், நாங்கள் செய்யும் பணிக்கும், நாங்கள் வாழும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும். இதனை கொடுத்து பாருங்கள்... வேலைக்கு வடமாநிலத்துக்காரன் நுழைகிறானா என்று பார்த்து விடலாம். நீங்கள் குறைந்த சம்பளம் தருவதால்... நாங்கள் ஒதுக்கிக் கொண்டு அவர்களுக்கு வழிவிடுகிறோம்... உங்களிடம் வந்து கையேந்தாமல் முடிந்த அளவு சுய தொழில் செய்கிறோம்.

இதற்காக தமிழக இளைஞர்கள் குடிபோதையில் மயங்கி கிடக்கிறார்கள்.... என சாடாதீர்கள். தமிழகத்தில் குடிக்காத தொழில் அதிபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் குடிப்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. இதனை நாங்கள் சொன்னால் தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புகளையும் பறி கொடுக்கிறீர்களே என கேட்கின்றனர். அதற்கும் தமிழகத்தில் நிலவும் ஊழலும், தரம் கெட்ட அரசியல் சூழலும் தான் காரணம்.

இதிலும் எங்களை இழிவுபடுத்தாதீர்கள். நாங்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சென்று எங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்வோம். அல்லது சுய தொழில் செய்வோம். தொழிலதிபர்களே தமிழக இளைஞர்களின் உழைப்பினை சுரண்டுவதை நீங்கள் நிறுத்தி, வேலைக்கு ஏற்ற சம்பளத்தை தாருங்கள் என பொறிந்து தள்ளுகின்றனர். செய்தியை படித்து விட்டு... இது கம்யூனிச சிந்தனை என பொங்காதீர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தமிழக இளைஞர்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

Tags

Next Story