முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளா வழியாக தண்ணீர் திறப்பு:விவசாயிகள் வெளிநடப்பு
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளா வழியாக இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முல்லை பெரியாறு அணை இந்தியாவிலேயே மிகவும் வித்தியாசமான அணை. இந்த அணையின் நீர் மட்ட உயரம் 155 அடி ஆகும். ஆனால் அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்க தமிழகத்திற்கு உரிமை உண்டு. முல்லை பெரியாறு அணையில் பலப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அணை நீர் மட்டத்தை 142 அடியில் பராமரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அணையின் அமைப்பு படி 136 அடி உயரத்திற்கு மேல் உள்ள நீரை மட்டுமே கேரளா வழியாக எடுக்கும் வசதி உண்டு. ஆனால் முல்லை பெரியாறு அணை நீரில் கேரளாவிற்கு எந்த உரிமையும் கிடையாது. பெரும் மழை பெய்து, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் அணையினை பாதுகாக்க 136 அடிக்கு மேல் நீரை கேரளா வழியாக வெளியேற்றும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது. அணையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழகம் எடுக்க முடியும்.
அணை மிகவும் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால், எப்போதும் 104 அடி நீர் விலங்களுக்காக சேமிக்கப்பட்டு இருக்கும். அணை நீர் மட்டம் 104 அடிக்கு கீழே வந்தால், மிகவும் வறட்சி ஏற்பட்டால், தமிழகத்திற்கு குடிநீர் எடுக்க கூட பம்ப் செய்தே தண்ணீர் எடுக்க வேண்டும். அணையினை இப்படி துல்லியமாக மதிப்பீடு செய்து ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் கட்டி உள்ளார்.
இந்நிலையில் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு அனுமதி உள்ள நிலையில், பல்வேறு சட்ட குளறுபடிகளை காட்டி கேரள அரசு 139 அடி நீர் மட்டத்தை எட்டும் முன்னர் தன்னிச்சையாக கேரளா வழியாக தண்ணீர் திறந்துள்ளது. கேரள அரசின் இந்த செயலுக்கு தமிழக அரசும் இணக்கம் தெரிவித்து உள்ளது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இன்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், முல்லை சாரல் விவசாய சங்கத்தினர், தேனி மாவட்ட விவசாய சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu