தேனி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதுரையை விட அதிகளவில் வெப்பம் பதிவாகிறது. ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையும் மலைகள் சூழ்ந்திருந்தாலும், வெயிலின் கடுமையில் இருந்து தப்ப முடியவில்லை. வீட்டிற்குள் 24 மணி நேரமும் பேன் ஓடிக்கொண்டிருந்தாலும், வியர்வையில் வழிந்தபடியே வாழ வேண்டி உள்ளது.
இந்த சூழலில் மாலை நேரங்களில் இதமான பருவநிலை உருவாகிறது. சில நேரங்களில் ஈரப்பதம் மிகுந்த காற்று வீசுகிறது. இந்த காற்று மிகுந்த ஆறுதலை தருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்கிறது. தேனி அரண்மனைப்புதுாரில் 5 மி.மீ., பெரியகுளத்தில் 2 மி.மீ., மஞ்சளாறில் 13 மி.மீ., சோத்துப்பாறையில் 47 மி.மீ., போடிநாயக்கனுாரில் 44.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.2 மி.மீ., பெரியாறு அணையில் .2 மி.மீ., தேக்கடியில் .4 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து எதுவும் அதிகரிக்கவில்லை. தற்போது பெரியாறு அணை நீர் மட்டம் 116.40 அடியாக சரி்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர் மட்டம் 54.46 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி நீர் வருகிறது. 72 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இப்படி வெயிலும், மழையும் மாறி, மாறி இருப்பதால், இந்த பருவநிலை மாற்றங்களை தாங்கும் உடல்திறன் இல்லாதவர்கள் கடும் உபாதைகளில் சிக்கி வருகின்றனர். பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பலருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். சிறிய அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் டாக்டர்களை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu