தமிழகமே வியக்கும் வகையில் தேனி நகர்மன்றத்தின் முதல் கூட்ட தீர்மானம்
தேனி நகராட்சி கவுன்சில் கூட்டம் தி.மு.க., நகராட்சிதலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடந்தது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் பதவியை தேனி நகர பொறுப்பாளராக இருந்த பாலமுருகன், தனது மனைவி ரேணுப்பிரியாவை அதிரடியாக களம் இறக்கி கைப்பற்றினார். இதற்கு காங்., தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் ஸ்டாலினும் தேனி நகராட்சி தலைவர் பதவியை ரேணுப்பிரியா ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பல்வேறு அதிகார மட்டங்களில், பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தும் ரேணுப்பிரியா பாலமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
தி.மு.க., மேலிடம் அமைத்த விசாரணைக்குழு, ஐபேக் டீம் விசாரணைக்குழு, சபரீசன் அமைத்த விசாரணைக்குழு, உளவுப்பிரிவு போலீசார் அமைத்த விசாரணைக்குழு அத்தனையும் ரேணுப்பிரியா பாலமுருகனுக்கு சாதகமாகவே அறிக்கைகளை தாக்கல் செய்தன.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, நேரு, துரைமுருகன் உள்ளிட்ட பலரும் தேனி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, ரேணுப்பிரியா பாலமுருகன் தேனிக்கு சிறந்த தேர்வு என முதல்வரிடமும் பரிந்துரை செய்தனர்.
இதனை தொடர்ந்து ரேணுப்பிரியா பாலமுருகன் மீது இருந்த கோபம் தலைமைக்கு குறைந்தது. இந்நிலையில் வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்., கட்சி முழுமையாக தோல்வி அடைந்ததால், தி.மு.க., தலைமையும் காங்., கட்சியை தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜ் அதனை நாம் ஏன் சுமக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறியது.
டெல்லியில் இருந்து கொண்டே ராகுல் தி.மு.க., அலுவலக திறப்பு விழாவிற்கு வராததால் தி.மு.க., 'காங்கிரஸ் கட்சியை பார்த்து போனால், போகட்டும் போடா' என பாடத்தொடங்கியது. காங்.,- தி.மு.க., இடையே விரிசல் விழுந்த நிலையில், காங்., கட்சிக்காக நமது கட்சியை சேர்ந்த நல்ல வேலை செய்யும் நபர்களை ஏன் இழக்க வேண்டும் என மனநிலைக்கு தி.மு.க., தலைமை வந்து விட்டது. இதனால் தேனி விவகாரம் தொடர்பாக காங்.,- தி.மு.க., இடையே நடந்த பேச்சு முற்றிலும் முறிந்து போனது.
இந்நிலையில் தேனி நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனர். இதில் முதல் தீர்மானமாக கருணாநிதிக்கு தேனியில் முழு உருவ வெண்கலச்சிலை அமைப்பது, தமிழக அரசின் அறிவிப்பு படி தேனி நகராட்சியில் சொத்துவரியை உயர்த்துவது உட்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளை தி.மு.க., கைப்பற்றி உள்ள நிலையில் தேனியில் மட்டும் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச்சிலை வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பாலமுருகனும் (தற்போது கட்சி பொறுப்பில் சஸ்பெண்டில் உள்ளார்), அவரது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகனும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்துள்ளனர். இந்த ஐடியா கூட தி.மு.க., தலைமை கொடுத்தது தான் என தி.மு.க.,வினரே கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu