தேனி நகராட்சி தலைவர் பதவியை கடைசி நொடியில் துாக்கியது தி.மு.க

தேனி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேணுப்பிரியா பாலமுருகன்.
தேனி- அல்லிநகரம் நகராட்சியின் தி.மு.க நகர செயலாளர் பாலமுருகன். தேனி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இவரது மனைவி ரேணுப்பிரியாவை தலைவராக்க திட்டமிட்டு, தி.மு.க., மேலிடத்தின் ஒப்புதலையும் பெற்று, 10வது வார்டில் களம் இறக்கினார். பாலமுருகன் தேனி 20வது வார்டில் களம் இறங்கினார். இவர்கள் இருவர் உட்பட தேனியில் 19 இடங்களை தி.மு.க., மட்டுமே கைப்பற்றியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் இரண்டு இடங்கள், அ.ம.மு.க., இரண்டு இடங்கள், பா.ஜ., ஒரு இடம், அ.தி.மு.க., ஏழு இடம், சுயேட்சை இரண்டு இடங்களை பெற்றனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்தின் மகன் டாக்டர் என்.ஆர்.டி., தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கூட்டணியில் தேனி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடாக பெற்றார். தனது தாய் சற்குணத்தை வேட்பாளராக அறிவித்தார். இது தி.மு.க.,வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் பலன் தரவில்லை. இன்று காலை 10 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக ரேணுப்பிரியா பாலமுருகன் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை அறிந்து அதிர்ந்த சற்குணம், வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் ரேணுப்பிரியா பாலமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதே பாணியில் துணைத்தலைவர் தேர்தலும் நடத்தப்பட்டு வழக்கறிஞர் செல்வம் துணைத்தலைவராக இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக, தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu