வைகை, பெரியாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
வைகை அணை.
தேனி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, நேற்று ஒரே நாளில் பெய்தது. மாவட்டத்தின் வழக்கமான மழையளவை விட இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிக மழை பதிவாகி உள்ளது. ஓராண்டு மழை நிறைக்காத கண்மாய்களை எல்லாம், ஒரு நாள் மழை நிறைத்து விட்டது.
பெரியாறு அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும், வைகை அணைக்கு 18 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. மேலும் நேற்றும் தொடர்ந்தது. இதனால் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் முல்லைப்பெரியாறு நீர் மட்டம் இரண்டு அடியும், வைகை அணை நீர் மட்டம் ஐந்து அடியும் உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி ஆண்டிபட்டியில் 10.8 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 8.2 மி.மீ., வீரபாண்டியில் 7 மி.மீ., பெரியகுளத்தில் 13 மி.மீ., மஞ்சளாறில் 11 மி.மீ., சோத்துப்பாறையில் 19 மி.மீ., வைகை அணையில் 11 மி.மீ., போடியில் 7.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.4 மி.மீ., கூடலுாரில் 1.8 மி.மீ., பெரியாறு அணையில் 3.4 மி.மீ., தேக்கடியில் 9.4 மி.மீ., சண்முகாநதியில் 23 மி.மீ., மழை பெய்தது.
இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70 அடியை எட்டி விட்டது. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், எந்த நிமிடமும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வைகை அணை திறக்கப்படும் நிலை காணப்படுகிறது.
பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியை தொட்டு விட்டது. அணைக்கு விநாடிக்கு 7500 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை டிசம்பர் மாத சராசரி மழையினை விட அதிகம். நேற்றும் லேசான மழை பதிவானது. இன்று காலை முதல் மேகமூட்டம், மிகவும் சில் என்ற வானிலை நிலவுகிறது. ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுகிறது. இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை கடந்த இரண்டு மாதமாக நிரம்பி வழியும் நிலையில் மாவட்டத்தின் அனைத்து அணைகளும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன.
இந்நிலையிலும், 18ம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும், உசிலம்பட்டி 58ம் கால்வாயிலும், திருமங்கலம் பாசன கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மத்தியில் ஏன் என்ற காரணம் புரியாத குழப்பம் இருந்து வருகிறது. நாளை 18ம் கால்வாயிலும், பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை மாவட்ட அளவிலான அதிகாரிகள் மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu