மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா மண்ணோடு போன கதை

மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா மண்ணோடு போன கதை
X
கடந்த 1980 களின் கடைசி மற்றும் 1990 களில் கோயம்புத்தூரில் வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க.

கடந்த 1980 களின் கடைசி மற்றும் 1990 களில் கோயம்புத்தூரில் வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க..இல்லேன்னா கடைசிக்கு நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க... பலருக்கு சொந்த பேர் போய்...அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

பல வருசத்துக்கு முன்னாடியே அவ்ளோ பெண்களுக்கு வேலை குடுத்த ஒரு தொழில் நகரம் கோவை. 3 ஷிப்ட்களும் பரபரப்பா இருக்கும். ராத்திரி பகலா ரோட்டில் சைக்கிள் போகவும் வரவுமா இருக்கும். காலைல ஷிப்ட் போனவங்களுக்கு வீட்ல இருந்து மத்தியானம் சாப்பாடு கொண்டு போய் செக்யூரிட்டி ஆபீஸ்ல குடுப்பாங்க. கலர் கலரா வயர் கூடை தொங்கறத பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்.

புல் நைட் போறவங்க நைட் 11 மணிக்கு கெளம்புவாங்க, மொத்தமா போய் ஹோப்காலேஜ்ல இருந்த மணி பேக்கரில ஒரு பீடி, டீ குடிச்சிட்டு அவங்க மில்லுக்கு போக, பின்னாடியே ஹாப் நைட் முடிச்ச ஒரு பெரிய கும்பல் வந்து மணி பேக்கரிலயும் கோபி கடைலயும் சேருவாங்க.... அதே டீ, பீடி, கூட ஒரு தேங்கா பன் சாப்பிட்டு கெளம்புவாங்க. இந்த காட்சி என்ன மாதிரி பீளமேட்டுல குடி இருந்தவங்களுக்கு ரொம்ப சகஜம்...மணிஸ் தியேட்டர்ல பொம்பளைங்க கூட தனியா செகண்ட் ஷோ போய்ட்டு தைரியமா வீட்டுக்கு வருவாங்க... புல் நைட் விட்டு இருப்பாங்க, ஜன நடமாட்டம் நெறய இருக்கும்னு சொல்லிட்டு....

தீபாவளி வந்தா பெரிய திருவிழா, எந்த மில்லுல எவ்ளோ போனஸ், அங்க என்ன பர்ஸன்ட், எப்போ பணம் வரும்னு மட்டும் தான் ஊர் பூரா பேச்சு இருக்கும். அவ்ளோ தொழிலுக்கும் வருமானம் குடுத்தது மில் தொழிலாளிகதான். பல மில் தொழிலாளிக சம்பளம் கவர்மண்ட் சம்பளத்தை விட ஜாஸ்தி, கவர்மண்ட் குடுக்கற போனஸ் விட இங்க ஜாஸ்தியா போனஸ் குடுக்கப்பட்டு இருக்கும்.... மில் வேலைய சுத்தி மட்டுமே இயங்கிட்டு இருந்திச்சு இந்த நகரம்....

லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, அதுக்குள்ள எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்...லட்சுமி மில்ஸ் - இப்போ கார்ப்ரேட் ஆபீஸ்.கங்கா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் ஆபீஸ் இருக்கற இடம்.

பீளமேடு ராதாகிருஷ்ணா மில் - பீளமேடு பஸ் ஸ்டாண்ட் எதிர் பொட்டல் காடா கெடக்குதே அந்த எடம்பயனீர் மில் - இப்போ PSG காலேஜ் பார்க்கிங்.ரங்க விலாஸ் - இப்போ NTC தயவால் தினக்கூலி வேலை.பிரகாச மில் - பன்மால் எதிரே இப்போ போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் - பாதி அபார்ட்மெண்ட் ஆகிடுச்சு மீதி தின கூலி.வரதராஜ மில் - ஓடிட்டு இருக்குன்னு நினைக்கறேன் - தின கூலி.விஜயகுமாரி ஜின்னிங் பாக்டரி - இப்போ கோக்கோ கோலா குடோன்.ஜெகநாதா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ABT சர்வீஸ் சென்டர்.

ராஜஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் குடோன், கூடிய சீக்ரம் அபார்ட்மெண்ட்.பாலசுப்ரமணியா மில் - அலாப்ட் ஹோட்டல், ஹிந்து பேப்பர் கம்பெனி இருக்கு இப்போ.கார்த்திகேயா மில் - ஓடிட்டு இருக்கு, தின கூலி.ஜனார்தனா மில் - கல்யாண மண்டபம்.கமலா மில் - பொட்டல் காடு, விரைவில் அபார்ட்மெண்ட்.லட்சுமி மில் -தின கூலின்னு நினைக்கறேன்.

தாமரை மில் - என்ன இருக்குனு கூட தெரில.கோத்தாரி - பிளாட் போட்டு வித்து பல வருஷம் ஆச்சு, இப்போ கோத்தாரி கார்டன்ஸ்.வசந்தா மில் - என்ன ஆச்சுன்னு தெரில.ரவீந்திரா மில் - பிளாட் போட்டு வித்தாச்சு.சரோஜா மில் - இருந்த இடம் தெரில.கதிர் மில்ஸ் - ரிலையன்ஸ் குடோன் பாதி ஓடுதுன்னு நினைக்கறேன்.

இத்தனை மில் இருந்தது வெறும் 10 km குள்ள (கோயம்புதூர் பூரா எத்தனை மில் இருந்து இருக்கும்னு யோசிச்சு பாருங்க) ஒவ்வொரு மில்லயும் கம்மி கம்மியா 1000 பேர் வேலை செஞ்சாங்க... இத்தனை மில்லையும் மூடிட்டாங்க. ஏன், ஒரு முதலாளிக்கு கூட தொழில் செய்ய தெரியலையா, சரி பாதி மில் தொழில் செய்ய தெரியமா மூடிட்டாங்கனு வச்சுகிட்டாலும் மிச்சம்...... அழிஞ்சது பூராம் கட்சி, சங்கம், போராட்டம்னு போனதால, இங்க தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் செட்டில்மென்ட் பேசறோம், செட்டில்மென்ட் பேசறோம்னு அழித்தது தான் மிச்சம்.

ஒரு காலத்தில் வெளியூர்களில் படிப்பை முடித்த இளைஞர்கள் கோவை சென்றால் மில்களில் வேலை கிடைக்கும் மென்று வருவார்கள். கோவை மில்களை காமராஜர் கண் இமைபோல் பாதுகாத்தார். பள்ளி வகுப்புகளில் இந்தியாவின் மான்செஸ்டர் எது என்று கேட்டால் கோயம்பத்தூர் பதில் வரும். அதுபோல் இந்தியாவின் நெற்களஞ்சியம் தஞ்சை மண்டலமாக இருந்தது. பழைய தஞ்சையும் பல மாவட்டங்களாக கூறுபோடப்பட்டு விட்டது. தென் இந்தியாவின் மான்செஸ்டரையும், நெற்களஞ்சியத்தையும் அழித்தவர்கள் பற்றி சொன்னால் கண்களில் கண்ணீர் வரும். அவ்வளவு கொடுமைகளை செய்து, அழகிய நகரத்தை அந்த நகரத்தின் தொழிலை முடக்கி விட்டனர்.

Tags

Next Story
உடல்நலக் குறிப்பு இன்று!