தேனிக்கு வந்த சோதனை: முடங்கி கிடக்கும் பணிகள் -குழப்பத்தில் மக்கள்

ரேணுப்பிரியா பாலமுருகன்
தேனி நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ரேணுப்பிரிபயா பாலமுருகன் தலைவராகவும், துணைத்தலைவராக வக்கீல் செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது முதல் உள்கட்சி பிரச்னை, கூட்டணி கட்சி பிரச்னை என இருவரும் அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னைக்கும், தேனிக்கும் சென்று பஞ்சாயத்து பேசுவதிலேயே அவர்களது நேரம் முழுக்க செலவாகி வருகிறது.
தலைவர் பொறுப்பேற்று விட்டதால், தனி அலுவலரான நகராட்சி கமிஷனரின் அதிகாரமும் குறிப்பிட்ட வரம்புக்குள் சுருங்கி விட்டது. எனவே தேனியில் குடிநீர் விநியோகம், குப்பை சேகரிப்பு, குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு போய் கொட்டுதல், சாக்கடை சீரமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் கூட நடக்கவில்லை. துப்புரவு பணியாளர்கள் பலர் இன்னும் சம்பளம் வரவில்லை என தினமும் தங்களது அதிகாரிகளுக்கு புகார் செய்து வருகின்றனர். நகராட்சி சுகாதார அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது.
இதனால் அழகான தேனி, இப்போது அழுகிய தேனியாக மாறி விட்டது. காரணம் தேனியில் பெரும்பாலான தெருக்கள் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. புதிய தலைவர் எப்போது பணியினை தொடங்குவார்... தங்கள் பிரச்னைக்கு விடியலை தருவார் என தேனி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து தேனி தி.மு.க., நகர முன்னாள் பொறுப்பாளர் (ரேணுப்பிரியாவின் கணவர்) பாலமுருகனிடம் கேட்டதற்கு, 'வரும் மார்ச் 30ம் தேதி பணிகளை தொடங்குவோம் என ஒருமுறை கூறினார். மற்றொரு முறை சில கமிட்டிகளை அமைக்க வேண்டி உள்ளது. எனவே ஏப்., 2ம் தேதி அன்று பணிகளை துவங்குவார்' என்றார். அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், தி.மு.க., தலைமையின் முழு ஆசீர்வாதத்துடன் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் அதுவரை தேனியில் முடங்கி கிடக்கும் பணிகளை யார் சீரமைப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது என்ன தேனிக்கு வந்த சோதனை என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu