இனிய நட்புக்கு இலக்கணம் எம்ஜிஆரும் நம்பியாரும்

இனிய நட்புக்கு இலக்கணம்  எம்ஜிஆரும் நம்பியாரும்
X

பைல் படம்

எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் இடையிலான நட்பு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து தொடங்கியது.

எம்.ஜி.ஆருக்கு தமிழ் சினிமாவில் ஆஸ்தான வில்லன் என்று சொன்னால் அது நம்பியார் தான். எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் வரை நம்பியார்தான் வில்லன்.

திரையில் ஆக்ரோஷமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாலும் நிஜ வாழ்வில் இவர்களைப் போல நண்பர்களை பார்க்கவே முடியாது என்று சொல்லலாம். ஒரு முறை சர்வாதிகாரி படத்திற்காக எம்.ஜி.ஆரும் நம்பியாரும் கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை பதம் பார்த்தது. அதேபோல அரசிளங்குமாரி படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தை பதம் பார்த்தது

இன்னும் சிறிது கீழே பட்டிருந்தால் எம்.ஜி.ஆருக்கு கண் பார்வையை பறிபோயிருக்கும். இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதல் கொண்டு சாதாரணமாக எடுத்துக் கொண்ட மனப்பாங்கு இருவரிடம் இருந்தது.

எம்.ஜி.ஆரை ராமச்சந்திரா.. என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம் இருந்தது. எம்.ஜி.ஆர் அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு வழங்கியிருந்தார். நம்பியார் என்னதான் திரையில் வில்லனாக மிரட்டினாலும் நிஜ வாழ்வில் அவரைப் போல கலகலப்பான மனிதர் கிடையவே கிடையாது.

படப்பிடிப்பின் போதும் சரி.. வெளியிலும் சரி.. அவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் சிரிக்க வைக்க கூடியவர். எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். அதில் எம்.ஜி.ஆர் மட்டும் இரட்டை வேடம் வேடத்தில் நடித்திருப்பார்.

நம்பியார் அவரது அத்தான் கேரக்டரில் வில்லனாக மிரட்டி கடைசியில் மனம் திருந்துவது போல் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாகவும் பல சாதனைகளை படைத்த படமாகவும் விளங்கியது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் அனைவரும் பேசினார்கள் கடைசியாக எம்.ஜி.ஆர் பேச வந்தார்.

ஆனால் அவர் பேச்சு மட்டும் தெளிவாக கேட்பதற்கு ஏற்கெனவே இருந்த மைக்குடன் மற்றொரு மைக் வைக்கப்பட்டது. இதைப் பார்த்த நம்பியார் மேடையின் அருகே வந்து,”மைக்கில் நாங்கள் பேசும்போது மட்டும் ஒரு மைக்தான் வைக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு மைக்கா” என்று தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்.ஜி.ஆரும்,” படத்தில் எனக்கு இரண்டு கேரக்டர்கள் அதனால்தான் எனக்கு இரண்டு மைக்குகள்” என்று சிரித்தபடியே பதில் அளித்தார். அரங்கம் அதிர சிரிப்பொலி எழுந்தது. நம்பியாரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்.

Tags

Next Story
future ai robot technology