ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய பாஜக தலைமை

ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய பாஜக தலைமை
X

பைல் படம்

தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகளை கவரும் வல்லமை தினகரன், சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது என பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது

எடப்பாடிக்கு இணையான வலிமையான தலைவராக ஓ.பி.எஸ்.ஐ., ஏற்க பா.ஜ.க., மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக ஊடகங்களில் என்ன தான் தம்மை ஓ.பன்னீர்செல்வம் முன்னிறுத்தினாலும் அவரை 'ஒரு வலிமையான' தலைவராக ஏற்க முடியாது என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியான முடிவில் இருக்கிறதாம்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என போட்டி எழுந்த போது பாஜக தலையிடும்; சமாதானம் செய்யும் என்றெல்லாம் கூறப்பட்டது. இப்போது ஒட்டுமொத்தமாக அதிமுகவும் எடப்பாடி பழனிசாமி வசமே போனது; அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி பதவியில் இறுக அமர்ந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியைத்தான் பாஜக நம்புவதாக கூறப்பட்டது.

இதனாலேயே டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகே அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தம்மை முதல்வராக ஏற்க முடியாது என அண்ணாமலை தெரிவித்த ஒரே காரணத்தால் பாஜகவுடனான அதிமுக கூட்டணியை முற்று முழுதாக முறித்துக் கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை டெல்லி பாஜக சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்து பலருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தார்; தற்போது அவரை மதித்த பாஜகவுக்கு துரோகம் செய்கிறார்; என்னதான் சமாதானம் செய்ய முயன்றாலும் இறங்கியும் வரவில்லை. அவரை எப்படி ஒரு நம்பகமான தலைவராக கருத முடியும் என்பது டெல்லி பாஜக தலைமை கேள்வி எழுப்பி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அதாவது எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்துகிற அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒரு வலிமையான வாக்கு வங்கி உள்ள தலைவரை கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெளியேறியதால் இனி நமக்குதான் டெல்லி முக்கியத்துவம் தரும் என எதிர்பார்ப்புடன் இப்போதும் இருக்கிறார் ஓபிஎஸ். இதனாலேயே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

ஆனால் டெல்லி மேலிடமோ ஓ.பன்னீர்செல்வத்துக்கு அப்படி எல்லாம் முக்கியத்துவம் தந்துவிடவில்லை; ஏனெனில் சொந்த ஜாதியிலேயே அவருக்கு அப்படி ஒன்றும் செல்வாக்கும் இல்லை என்பது தெரியும் என்கிறதாம். இதனாலேயே டெல்லி பாஜக தலைமையின் பட்டியலில். முதலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அடுத்ததாக சசிகலாவை லிஸ்ட்டில் வைத்துள்ளதாம் டெல்லி பாஜக. 3-வதாகவே இருக்கட்டும் பார்த்துக்கலாம் என ஓபிஎஸ்.,ஐ வைத்து இருக்கிறாதாம்.

முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாகப் பெறக் கூடிய வல்லமை யாருக்கு? என்ற ரேஸின் அடிப்படையில்தான் மேலே சொன்ன முடிவுக்கு வந்ததாம் பாஜக தலைமை. இதனடிப்படையில்தான் டிடிவி தினகரனுக்கு முன்னுரிமை கொடுக்கிறதாம். அதிமுக இல்லவே இல்லை என்கிற நிலைமை உறுதியாகும்போது அந்த இடத்துக்கு அமமுகவை கொண்டு வந்து நிறுத்த இருக்கிறது பாஜக. அதற்கு அடுத்ததாக சசிகலாவின் 'சில பல' விருப்பங்களை செய்து கொடுத்து அவரையும் மறைமுகமாக கூட்டணியில் தக்க வைக்க இருக்கிறதாம் பாஜக. இந்த இருவரும் ஓகே சொன்ன பிறகே ஓபிஎஸ் பக்கம் வந்து சேருங்க என அழைக்கப் போகிறதாம் டெல்லி பாஜக. இதுதான் டெல்லி பாஜகவின் தமிழ்நாடு தொடர்பான இப்போதைய பார்முலா என அக்கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story