இடுக்கி லோக்சபா தொகுதியில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் போட்டி
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையை பூர்விடமாக கொண்டவர் அன்வர்பாலசிங்கம். இவருக்கு வண்டிப்பெரியாறில் ஒரு வீடு உள்ளது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அரசியல் விஞ்ஞானம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் இவர், அரசு வேலைக்கு செல்லாமல், தொழில் எதுவும் செய்யாமல் முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காக போராட்டங்கள் நடத்த தொடங்கினார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை. இரண்டு பெண் குழந்தைகள். இவரது மனைவி தன் வருவாய் மூலம் குடும்பத்தை கவனித்துக் கொள்வதால் அன்வர்பாலசிங்கத்திற்கு குடும்ப பிரச்னைகள், அதற்கான பொருளாதார தேடல்கள் மிகவும் குறைந்து விட்டது.
எனவே பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்து கடந்த 25 ஆண்டாக போராடி வருகிறார். தமிழர்களை பொறுத்தவரை இவர் விவசாயிகளின் உரிமைக்காக போராடும் ஒரு உரிமை போராளி. ஆனால் கேரள அரசு இவரை ஒரு உரிமைப்போராளி போல் நடத்தவில்லை. இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்து, கைது செய்ய நேரம் பார்த்து காத்துக் கொண்டுள்ளது. அந்த அளவு பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் தகிடுதத்தங்களை வெளியில் கொண்டு வந்து தமிழக அரசு மூலம் கேரள அரசுக்கு செக் வைத்து, பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை பாதுகாக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2011ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னைக்காக தேனி மாவட்டத்தில் பெரும் போராட்டம் வெடித்த போது, இடுக்கி தொகுதியில் உள்ள தமிழர்களும் அன்வர்பாலசிங்கம் தலைமையில் அணிவகுத்து நின்று கேரள அரசுக்கு தங்களின் கண்டனங்களை பதிவு செய்து, கண்டன ஊர்வலங்களையும் நடத்தினர். இந்த அதிர்ச்சியில் இருந்து கேரள அரசு இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இடுக்கி தொகுதியில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என இவர் நடத்திய போராட்டம் பெரும் பிரச்னையை கிளப்பியது.
இருமாநில உளவுத்துறை போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, தற்போது வரை இவர், இப்பிரச்னையை ஒத்தி வைத்துள்ளார். (இப்பிரச்னை மீண்டும் தலைதுாக்கினால், தேனி- இடுக்கி மக்களிடையே மோதல் ஏற்பட்டு விடும் வாய்ப்புகளும் உள்ளது. அந்த அளவு இது மிகவும் சிக்கலான விஷயம்).
இந்நிலையில் இவரை இடுக்கி தொகுதியில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறக்க தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு, இவர் தேசிய கட்சிகளின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கினால், சங்கம் பாதிக்கப்படும் என கருதி அந்த வாய்ப்பினை மறுத்து விட்டார்.
இதற்கு மாற்று ஏற்பாடாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இடுக்கி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரா களம் போவதாக அன்வர்பாலசிங்கம் அறிவித்துள்ளார். இடுக்கி தொகுதியில் வாழும் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கும், உரிமைகளை பெறுவதற்கும் தான் அங்கு எம்.பி.,யாக இருப்பது அவசியம் என இவர் அறிவித்திருப்பது, இப்போதே சூட்டை கிளப்பி உள்ளது. அறிவித்தபடி, இவர் களம் இறங்கினால், இடுக்கி தொகுதியும் மிகுந்த போட்டி, டென்சன் நிறைந்த ஒரு பரபரப்பான தொகுதியாக மாறி விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu