செங்கரும்பு தேன் மிட்டாய் சாப்பிடலாமா வாருங்கள்..

செங்கரும்பு தேன் மிட்டாய்  சாப்பிடலாமா  வாருங்கள்..

தனது வீட்டில் சொந்தமாக தயாரித்த செங்கரும்பு தேன்மிட்டாய் விற்கும் கோடாங்கிபட்டி திருச்செந்துாரை சேர்ந்த முனியாண்டி குமார். விற்கும் இடம்: குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் விழா திடல்.

10 ரூபாய்க்கு விற்கப்படும் செங்கரும்பு தேன் மிட்டாயினை இன்றைய கல்லுாரி மாணவ, மாணவிகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்

செங்கரும்பு தேன் மிட்டாய் சாப்பிடலாமா வாருங்கள்.. தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய கிராமிய தொழில்கள் பெரும் அழிவினை சந்தித்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் தயாராகும் உணவுப்பொருட்கள் அதாவது ஸ்நாக்ஸ் வகைகள் பெரும் நெருக்கடியில் தான் இருக்கின்றன.

இருப்பினும், கடலை மிட்டாய், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய், கை முறுக்கு, செங்கரும்பு தேன் மிட்டாய், மிக்சர், சேவு உள்ளிட்ட பல்வேறு வகை ஸ்நாக்ஸ்களின் விற்பனை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது கிராமிய சிறுதொழில் தயாரிப்பு உணவுகள் சூப்பர் மார்க்கெட்டுகளை ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன.

இதில் தெருவில் விற்கப்படும் ஸ்நாக்ஸ்கள், மிட்டாய் வகைகளும் அடக்கம். குறிப்பாக செங்கரும்பு தேன் மிட்டாய் என ஒரு வகை சுவீட் உள்ளது. கருப்பட்டி பாலில் மிட்டாய் காய்ச்சி, அதனை குச்சியில் சுற்றி, ஜீனி, வாழைப்பழம் கலந்த பஞ்சாமிர்தம் போன்ற ஒரு கலவையில் முக்கியெடுத்து, மீண்டும் ஒருமுறை தேங்காய் பூவில் முக்கி எடுத்து தருவார்கள்.

தெருவில் சைக்கிளில் விற்று வரும் இந்த சுவீட்டின் விலை 10 ரூபாய் மட்டுமே. குறிப்பாக கடந்த 1980ம் ஆண்டிற்கு முன்பு பிறந்த அத்தனை பேரும் இந்த மிட்டாயினை சாப்பிட்டிருப்பார்கள். இப்போது, இந்த வகை மிட்டாய் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அதுவும் பள்ளி, மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி திருச்செந்துாரை சேர்ந்த முனியாண்டி குமார் என்பவர் செங்கரும்பு தேன் மிட்டாயினை 15 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்து வருகிறார். சைக்கிளில் தினமும் பல ஊர்களுக்கு சென்று அவர் விற்பனை செய்வார். கல்லுாரிகள் முன்பாகவும் நின்று வியாபாரம் செய்வார்.

அவரது வியாபாரம் களை கட்டி நிற்கும். செங்கரும்பு தேன் மிட்டாய்க்கு கல்லுாரிகளில் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர் என அவர் பெருமையுடன் கூறுகிறார். ஆரம்பத்தில் தடுமாறிய செங்கரும்பு தேன் மிட்டாய் வியாபாரம் இன்று கொடி கட்டிப்பறக்கிறது. தினமும் முனியாண்டி குமாருக்கு நல்ல வருவாய் வருகிறது.

திருமண வீடுகளுக்கு ஒரு மிட்டாய் 5 ரூபாய் என முனியாண்டி குமார் சப்ளை செய்கிறார். அதாவது திருமண மண்டபங்களில் சாப்பிட்டு முடித்து வெளியே வருபவர்களுக்கு இவரே ஒவ்வொரு மிட்டாயாக கொடுக்கிறார். எத்தனை குச்சிகள் தீர்ந்துள்ளது என்பதை கணக்கு பார்த்து அத்தனை மிட்டாய்களுக்கு திருமண வீட்டாரிடம் பணம் வாங்கிக் கொள்கிறார். திருமணம், காதணி விழா, பூப்புனிதநீராட்டு விழா, வசந்தவிழா உள்ளிட்ட விசேச வீடுகளிலும் இவரது சொந்த தயாரிப்பான செங்கரும்பு தேன் மிட்டாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளதாக முனியாண்டி குமார் தெரிவித்தார்.

குறிப்பாக கிராமிய தொழில்களுக்கு மக்கள் ஆதரவு தர தொடங்கி விட்டனர் என கூடும் முனியாண்டி குமார். மிட்டாய் தயாரிப்பு குறித்து .. 86082 19673 என்ற எண்ணில் விவரம் அறிந்து கொள்ளலாம்.

Tags

Next Story