எஸ்பி வேலுமணி ட்வீட் மற்ற சீனியர்கள் கப்சிப்?
பைல படம்
பெரும்பாலான சீனியர் தலைவர்கள் கனத்த மவுனத்துடன் இருந்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதலைத் தொடர்ந்து கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்தது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகியது.
இந்த விலகல் சில நாட்களிலேயே முடிவுக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்போ, 2024 லோக்சபா தேர்தலில் மட்டும் அல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறாது; அதிமுக தலைமையில் தனி கூட்டணி தான் அமைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்த நிலையில் திடீரென அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்பி வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில், என்றென்றும் அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக்குடன் அதிமுக கொடி கட்டிய சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்கிற ஒரு படத்தைப் பதிவிட்டது பெரும் விவாதப் பொருளாகி விட்டது.
அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் இதனை வழிமொழிந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான அதிமுக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதல்வர் ஜெயலலிதாவுடன் 1990களின் தொடக்கத்தில் எடுத்த போட்டை ஒன்றை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்துள்ளார்.
ராஜ்சத்யன்: அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன், எங்களுக்கான அடையாளம் அஇஅதிமுக; எங்களை வளர்த்தது அஇஅதிமுக; எங்கள் ரத்தத்தில் அஇஅதிமுக என பதிவிட்டுள்ளதுடன் ஜெயலலிதாவுடன் தாம் சிறுவயதில் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் எம்ஜிஆரின் அதிமுக முதல் உறுப்பினர் அட்டையையும் ராஜ் சத்யன் ஷேர் செய்திருக்கிறார்.
அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து, மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தந்த புரட்சி தமிழன் காட்டும் வழியில். என்றென்றும் அதிமுககாரன் என பதிவிட்டிருக்கிறார்.
அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கிருஷ்ண விஜய், "முற்றுப்புள்ளி வைத்தார் எங்கள் அண்ணன் எஸ்பி வேலுமணி என பதிவிட்டுள்ளார். அதிமுகவின் @GowriSankarD_, மறைந்த எஸ்டி சோமசுந்தரத்துடன் இருக்கும் சிறு வயது படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
குடிமங்கலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் - IT Wing ஷாஜஹான் சாதிக் என்பவர், பிறந்த திலிருந்தே அதிமுகடா! என எம்ஜிஆர்- ஜானகி அம்மையார் படம் முன்பாக எடுத்த பழைய குடும்ப படத்தைப் பகிர்ந்துள்ளார்.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பிஆர்ஜி அருண்குமார் ஜெயலலிதாவுடனான பழைய போட்டோ ஒன்றை தமது எக்ஸ் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்திருக்கிறார். இருப்பினும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இதில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu