இந்தியாவின் அதிசய மனிதன் நடை மன்னன் ராஜேந்திரன்
நடைமன்னன் ராஜேந்திரன்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் சூழக்காவிளையைச் சேர்ந்த இவருக்கு எழுத, படிக்கத் தெரியாது. தொழிலாளி. மெலிந்த தேகம் கொண்ட உயரமான மனிதர். குழி விழுந்த கண்கள், ஒடுங்கிப் போன கன்னங்கள், கறுத்த தேகம்... என்பதெல்லாம், அவரை தனி மனிதனாக மற்றவர்களுக்கு காட்டியது.
ஒரு மணி நேரத்தில் 15 கி.மீ. தொலைவு நடப்பார். நாள்தோறும் 80 கிலோ மீட்டர் தூரத்தை சர்வ சாதாரணமாகக் கடப்பார். மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளைக்கு அண்மையில் நடந்து சென்றவரிடம் பேசிய போது கூறியதாவது:
'சிறுவயதில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்குச் செல்வதற்காக பேருந்துக்குக் காத்திருப்பேன். அப்போது, மற்றவர்கள் சற்று தூரம் தள்ளியே நின்றனர். படிப்பறிவு இல்லாததால், பேருந்து பெயர் பலகையை படிக்க முடியவில்லை. அருகில் நின்றவர்களிடம் பேருந்து செல்லும் இடம் குறித்து கேட்டால் கூட யாரும் சொல்வதில்லை. விசித்திரமான உருவமாக என்னை பார்த்து ஒதுங்கினர். இந்த ஒதுக்கி வைத்தல்தான் இன்று வரை என்னை நடக்க வைத்திருக்கிறது.
பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில், நடந்து விடலாம் என்று நடக்க தொடங்கி இன்றும் நடந்து கொண்டிருக்கிறேன். 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை நிகழ்ந்த போது, போரை நிறுத்த வலியுறுத்தி களியக்காவிளையில் இருந்து சுமார் 750 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு 8 நாள்களில் நடந்து சென்று, அப்போதைய தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தேன்.
இதேபோன்று, 580 கி. மீ. தொலைவில் உள்ள கேரளத்தின் காசர்கோடு பகுதியை 108 மணி நேரத்தில் நடந்தேன். நடப்பது என்னை உற்சாகப்படுத்துகிறது. நாள்தோறும் பல கி.மீ. நடப்பதால், எனது வருமானத்தில் பெரும்பகுதி செருப்புகள் வாங்கவே தேவைப்படுகிறது. சாதாரண செருப்பு என்றால் மாதத்துக்கு 6 ஜோடியும், விலையுயர்ந்த செருப்பு என்றால் 3 ஜோடி செருப்பும் தேவைப்படுகிறது.
தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். சில வேளைகளில் காலை அல்லது இரவில் சாப்பிடுவதுண்டு. சாதாரணமாக நடக்கும் போது 20க்கும் மேற்பட்ட டீக்கள் அருந்துவதுண்டு. அதுவும் என்மேல் அன்பு கொண்ட பலரும் வாங்கித் தரும் டீக்கள் தான். ஆரம்பத்தில் எனது தோற்றத்தை வைத்து பலரும் 'பைத்தியம்' என்றார்கள். கடைகளில் டீ கேட்டால் கூட விரட்டி விடுவார்கள். ஊடகங்களில் என்னைப்பற்றி தகவல்கள் வந்தவுடன் எனது நிலைமையே மாறிவிட்டது. பெரும்பாலானோருக்கு என்னை நன்றாகத் தெரிகிறது.
'கையில் பணம் உள்ளதா?' என சோதித்து உணவிட்டவர்கள், தற்போது சாப்பிட்ட உணவுக்கு பணம் பெற மறுக்கிறார்கள். ஆரம்பத்தில் அவமானத்தை தந்த நடை இன்று எனக்கு மரியாதையை தேடித் தந்திருக்கிறது. இந்த மரியாதையும், புகழும் நடப்பதால் மட்டுமே கிடைத்தது. எனது 42 ஆவது வயதில் திருமணம் நடந்தது. நடை மனிதனோடு வாழ முடியாது என்று கூறி, 15 மாதங்களில் மனைவி பிரிந்துவிட்டார். விவகாரத்தும் ஆகிவிட்டது. வாழ்வில் எதை இழந்தாலும் நடையை மட்டும் இழக்கவில்லை. நடப்பதால் மனம் எப்போதும் சந்தோஷமாக உள்ளது. நோய்கள் எதுவும் என்னை அண்டவில்லை. நடந்து கொண்டிருக்கும்போதே என்னுயிர் பிரிய வேண்டும் என்பதே என் ஆசை. 60 நாள்களில் கன்னியாகுமரியில் இருந்து தில்லிக்கு நடந்து செல்வதே எனது லட்சியம்' என்கிறார் ராஜேந்திரன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu