ஆட்சியை மாற்றிய ஒற்றை புகைப்படம்

ஆட்சியை மாற்றிய ஒற்றை புகைப்படம்
X

எம்ஜிஆர் (பைல் படம்)

எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளியான அந்த ஒற்றைப் புகைப்படம் தான் காங். ஆட்சிக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டியது.

நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்பு முனையாகவே அமைந்தது.

1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவம னையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத் துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரஸ் பேரியக் கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றி வைத்தது என்பது உண்மை).

மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவ மனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!தாயகம் காப்பது கடமையடா!”என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?

“கனக விஜயரின் முடித்தலை நெறித்துகல்லணை வைத்தான் சேரமகன்!இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.

அடுத்து……!

‘‘கருவினில் வளரும் மழலையின் உடலில்தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம், காத்திட எழுவான் அவள் பிள்ளை!வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!மக்களின் மனதில் நிற்பவர் யார்?மாபெரும் வீரர், மானம் காப்போர்,சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?

சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு