தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் குவியும் முதலீடு..!
பைல் படம்
சென்னையில் உள்ள ஆலையில் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த புதிய முதலீட்டின் மூலம் 2 எலெக்ட்ரிக் கார்கள் உள்பட 6 புதிய கார்களை உற்பத்தி செய்யவுள்ளதாக ரெனால்ட்-நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டின் மூலமும் தமிழ்நாட்டில் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியுடன், பெருமையையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த பெருமையை தக்க வைத்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக எதிர்காலத்தை மனதில் வைத்து ஏராளமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு தொடர்ந்து வீரநடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே தான் முன்னணி நிறுவனங்கள் பலவும் பெரும் தொகையை முதலீடு செய்கின்றன. இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஓலா எலெக்ட்ரிக் உள்பட பல்வேறு நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu