17 முறை… சிவாஜிக்கு போட்டி சிவாஜி தான்
பைல் படம்
தமிழ் சினிமாவில் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் நிச்சயமாக சிவாஜி கணேசனின் நடிப்பு பெருமளவு பேசும் ஒரு சிறப்பாக இருக்கும். அந்த அளவிற்கு நடிப்பிலும், வசனம் பேசி அசத்து வதிலும் தனி திறமை பெற்ற சிவாஜி கணேசன் திரைத்துறையில் பல சாதனைகளை செய்துள்ளார். மேலும் தனது சாதனைகளையே பலமுறை முடியடித்த பெருமையும் இவருக்கு உண்டு.
இன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வருடத்திற்கு 2 அல்லது ஒரு படம் தான் வெளியாகி வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர்- சிவாஜி காலக்கட்டத்தில் திட்டமிட்டபடி படத்தை முடித்து சொன்ன தேதியில் வெளியிடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்- சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு பல படங்களை கூட வெளியிட்டுள்ளனர்.
இதில் பலமுறை இவர்கள் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிகழ்வும் நடத்துள்ளது. அந்த வகையில் சிவாஜி தனது திரை வாழ்க்கையில் 17 முறை இரு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இந்த சாதனை படைத்த முதல் நடிகர் சிவாஜி என்று கூட சொல்லலாம்.
1952-ம் ஆண்டு பராசக்தி என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சிவாஜியின் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளியான மனோகரா படம் ஒரே நாளில் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியானது. இது ஒரே நாளில் 2 படங்கள் வெளியான கணக்கில் வராது என்றாலும், மனோகரா படம் 3 மொழிகளிலுமே சிவாஜிக்கு பெரிய வெற்றியை கொடுத்த படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு சிவாஜி நடிப்பில் தூக்கு தூக்கி மற்றும் எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படம் வெளியானது. இதில் தூக்கு தூக்கி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களின் மோதல் காரணமாக கூண்டுக்கிளி படம் ஒரே நாளில் திரையிடல் நிறுத்தப்பட்டது. ஆனாலும் சிவாஜிக்கு இரு படங்களுமே மறக்க முடியாத படமாக அமைந்தது.
அடுத்து 1955-ம் ஆண்டு கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதில் கள்வனின் காதலி படம் வெற்றி பெற்ற நிலையில், கோடீஸ்வரன் படம் சுமாரான வெற்றியை பெற்றது. தொடர்ந்து 1956-ம் ஆண்டு நான் பெற்ற செல்வம், நல்ல வீடு ஆகிய படங்கள் வெளியானது. இதில் நான் பெற்ற செல்வம் படம் வசூலில் சாதனை படைத்திருந்தது.
தொடர்ந்து 1959-ம் ஆண்டு அவள் யார், பாகப்பிரிவினை ஆகிய திரைப்படங்களும், 1960-ம் ஆண்டு பாவை விளக்கு, பெற்ற மனம் உள்ளிட்ட படங்களும், 1961-ம் ஆண்டு ஸ்ரீவள்ளி, எல்லாம் உனக்காக ஆகிய படங்களும், 1964-ம் ஆண்டு நவராத்திரி, முரடன் முத்து ஆகிய படங்களும் வெளியானது. இதில் சிவாஜியின் 100-வது படமாக வெளியான நவரத்திரி திரைப்படத்தில் அவர் 9 கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. முரடன் முத்து திரைப்படமும் சிவாஜிக்கு வெற்றியை கொடுத்தது.
இதனையடுத்து 1967-ம் ஆண்டு ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் உள்ளிட்ட படங்கள ஒரு நாளில் வெளியானது. இதில் கலர் படமாக வெளியான ஊட்டி வரை உறவு படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில, பிளாக் அன்ட் வொயிட் படமாக வெளியான இரு மலர்கள் பலரும் அதற்கு இணையாக வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து 1970-ல் விளையாட்டுப்பிள்ளை, தர்பி என்ற இந்தி படம் ஒரே நாளில் வெளியானது.
அதே ஆண்டில் எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகிய படங்களும், ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றது. 1971-ம் ஆண்டு சுமதி என் சுந்தரி, பிராப்தம், ஆகிய படங்களும், 1975-ம் ஆண்டு வைரநெஞ்சம், டாக்டர் சிவா, ஆகிய படங்ளும், 1982-ம் ஆண்டு பரிட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும் ஆகிய இரு படங்களும் ஒரு நாளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் 1984-ம் ஆண்டு தாவணி கனவுகள், இரு மேதைகள் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.
இறுதியாக கடந்த 1987-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு, கிருஷ்ணன் வந்தான் ஆகிய இரு திரைப் படங்களும் ஒரே நாளில் வெளியானது. தமிழ் சினிமா வரலாற்றில் 17 முறை தனது இரு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனை படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu