விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதை தடுக்க முதல்வர் சட்டம் இயற்றுவாரா?
தமிழகத்தில் இன்று அதிகம் பேர் பணிபுரியும் தொழில் எது என கேட்டால், ரியல் எஸ்டேட் தொழில் என கண்ணை மூடிக்கொண்டு கூறி விடலாம். காரணம், முதலீடு இல்லாமல் வாய்ப்பந்தல் மூலமே மாதந்தோறும் பல லட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பு ரியல் எஸ்டேட்டில் மட்டுமே உள்ளது. இன்றைய நிலையில் ஒரு பிளாட்டின் விலை தமிழகத்தின் எந்த பகுதியில் வாங்கினாலும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாயில் தான் தொடங்குகிறது. அதிகபட்சம் பல கோடி ரூபாய்களை கடந்து செல்கிறது. இதில் புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் முதல் இரண்டு சதவீதம் வரை கிடைக்கிறது. வாங்குபவரும் தருவார். விற்பவரும் தருவார் என்பது கூடுதல் தகவல்.
இதனால் புரோக்கர்களுகு்கு மாதம் ஒரு வேலை முடித்தால் கூட போதும் பல லட்சம் தேறி விடும். இதனால் ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் அறுதிப்பெரும்பாலானோர் நீதி, நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பாவம், பந்தம், சொந்தம் என எந்த ஒரு விதிமுறைக்கும் கட்டுப்படுவதில்லை. வேலையை முடித்து கமிஷன் வாங்க வேண்டும் என்பது மட்டும் குறியாக செயல்படுகின்றனர். விளைநிலங்களை பிளாட் போடுபவர்களும், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், பாவத்தின் பலனை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது லாபத்தின் பலனை அனுபவிக்கலாம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர். பிளாட் போட்ட இடத்தை விற்று காசாக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
இவர்களின் சம்பாதிக்கும் வெறியை அரசுத்துறைகளின் கீழ்நிலை நிர்வாகம் முதல் உச்சபட்ச நிர்வாகம் வரை அத்தனை பேரும் மிகச்சரியாக புரிந்து கொண்டு எவ்வளவு கறக்க முடியுமோ? அவ்வளவு கறந்து விடுகின்றனர். அதாவது இன்று பணம் கொடுத்தால் அரசு கட்டடத்தையோ, அல்லது அரசுக்கு சொந்தமான நிலத்தையோ கூட விற்று விடலாம். அதுவும் டி.டி.சி.பி., அப்ரூவல், ரெரா அப்ரூவல் என அரசின் அத்தனை விதிமுறைகளையும் கடந்தே விற்று விடலாம். என்ன ரிஸ்க்குக்கு தகுந்த விலை தான் தர வேண்டியிருக்கும். இதனை விற்பனையில் ஈடுகட்டி விடுகின்றனர்.
இன்று தமிழகத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக விளை நிலங்கள் மிக, மிக வேகமாக சுருங்கி வருகின்றன. அரசு மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்டங்கள் காரணமாக இன்று நான்கு வழிச்சாலை ஓரம் உள்ள நிலங்களின் மதிப்பு மட்டுமின்றி, தொலைதுார கடைக்கோடி கிராமம் வரை அத்தனை விளைநிலங்களும் மிகுந்த மதிப்பிற்குரிய நிலமாக மாறி விட்டது. அதே சூழலில் விவசாய விளைபொருட்களின் வீழ்ச்சி, விவசாய தொழிலாளர் பற்றாக்குறை, விவசாயத்தில் உள்ள இதர பிரச்னைகளால் விவசாயிகள் பலர் ஆளை விட்டால் போதும், பணம் இருந்தால் வேறு வழிகளில் பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
இதனால் விளைநிலங்களை மிக, எளிதில் தரிசு நிலங்களாக மாற்றி அதற்கு அரசின் அத்தனை அப்ரூவல்களும் வாங்கி விற்று வருகின்றனர். இதனை தடுக்கும் முயற்சிகள் மூலம் சிலர் வருவாய் பார்க்க ஆங்காங்கே போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இன்று தமிழகத்தின் பல உள்ளாட்சிகளில் விளைநிலங்களை விற்காதே என்ற போஸ்டர்களை பார்க்கலாம். இதன் மூலம் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ஏதாவது அக்கரை உண்டா? அல்லது ஆதாயம் உண்டா? என்ற பட்டிமன்றமே நடத்தி ஆய்வு செல்லும் நிலை தான் காணப்படுகிறது. அந்த அளவு இன்று சமூக ஆர்வலர்கள் என்ற பெயரிலும் ஆதாயக்காரர்கள் பெருகி விட்டனர். எப்படியோ ரியஸ் எஸ்டேட் தொழிலில் இன்று புலி யார்? மான் யார்? என்பதை கூட கண்டறிய முடியவில்லை. சில நேரங்களில் இத்துறையில் மான் கூட புலியை வீழ்த்தி விடுகிறது. வீழ்ந்தது புலியா? மானா? என்பதை விட முக்கியம் வீழ்ந்தது விளைநிலங்கள் என்பது தான். இது தான் மிகப்பெரிய வேதனைகளை உருவாக்கி வருகிறது. இதனை சரி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை.? அவர் நினைத்தால் மட்டுமே தமிழகத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu