உயிருடன் பிரபாகரன்...மறுப்பவர்கள் பதில் சொல்லுங்க...

உயிருடன் பிரபாகரன்...மறுப்பவர்கள் பதில் சொல்லுங்க...
X

பைல் படம்

பிரபாகரன் உயிருடன் இல்லை என மறுப்பவர்களுக்கு மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை சிலர் மறுக்கின்றனர்; அப்படி மறுக்கின்றவர்களுக்கு பிரபாகரனின் ஆரம்பகால நெருங்கிய நண்பரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது: அண்ணன் பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னும், இரண்டாவது முறையாக இடைப்பட்ட காலத்திலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்போதும் அறிவித்துள்ளார். 1979-80 - இலிருந்து பிரபாகரனைத் தெரிந்த எங்களைப் போன்றோர், அண்ணன் நெடுமாறனின் கருத்தை ஆதரிப்பதோடு மட்டும் இல்லாமல், நாங்களும் அது குறித்தான தகவல்களை உறுதி செய்து, அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம்.

அந்த வகையில் சில வினாக்களை இங்கே வைக்கின்றேன். கீழ் குறிப்பிட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்மாக ஆவணங்கள் சரியாக வெளியிடப்பட்டதா?

1. பிரபாகரனுடைய இறப்புச் சான்றிதழில் பிரபாகரன், த/பெ, வேலுப்பிள்ளை, வயது, அவர் கொல்லப்பட்ட நேரம், இடம் ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்து, அந்த மரணச் சான்றிதழை இலங்கை அரசு சரியாக அளித்துள்ளதா?

2. பிரபாகரனைப் பற்றிய டிஎன்ஏ அறிக்கைக்கு யாருடைய ரத்தம் பயன்படுத்தப்பட்டது? அவருடைய தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், அவரின் புதல்வியின் ரத்தத்தைக் கொண்டுதான் டிஎன்ஏ பரிசோதனையை நடத்த முடியும். டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தத்தைச் சோதித்து அறிக்கை தர வேண்டும் என்றால் ஏறத்தாழ ஒருவாரம் ஆகும்.

ஆனால் அப்போது உடனே டிஎன்ஏ அறிக்கை தயாராகிவிட்டது என்று சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்ன அறிக்கையும் சரியாக வெளியுலகத்துக்குத் தெரியும்படி வெளியிடப்படவில்லை. டிஎன்ஏ பரிசோதனையை இலங்கையில் செய்வதற்கான வசதிகள் இல்லை என்ற தகவல் உள்ளது.

அப்படியென்றால் இந்தியாவுக்கோ, வெளிநாட்டுக்கோ அனுப்பி டிஎன்ஏ பரிசோதனையைச் செய்திருந்தால், எவ்வளவு அவசரம் என்றாலும் முழு அறிக்கை பெற குறைந்தது பத்து நாட்களாவது ஆகும். அன்றைக்கு (2009 - இல் ) சென்னை பிரபல தடயவியல் நிபுணரான பி.சந்திரசேகரன் கூட, பிரபாகரனின் டிஎன்ஏ அறிக்கையை இலங்கை அரசு இவ்வளவு விரைவாக வெளியிட்டிருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்.

3. பிரபாகரனின் உடலை நந்திக் கடலில் 18.05.2009 அன்று இலங்கை அரசு கைப்பற்றியிருந்தால், கைப்பற்றியபோது, எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டனவா?

4. ராஜீவ் காந்தி படுகொலை குற்றப்பத்திரிகையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால், அந்த குற்றப் பத்திரிகையில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதா?

5. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான பன்முக விசாரணையில், பிரபாகரன் இறந்திருந்தால், தொடர்ந்து 32 ஆண்டுகளாக அவர் வாழ்வதைப் போல விசாரணைகளும் ஒருபுறம் நடக்கின்றதா?

6. கடந்த 2009 - இல் முள்ளிவாய்க்கால் போர் தொடர்பாகப் பேசும்போது, இந்திய அரசின் உதவியால் புலிகளை அழித்தோம் என்று ராஜபக்சே சொன்னார். அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு, புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்டது; பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான ஆவணங்களாகவோ, இல்லை நாடாளுமன்றத்தில் அறிக்கையாகவோ ராஜபக்சே குறிப்பிட்டது உண்மைதான் என்று வெளியிட்டதா?

7. ஒரு நாட்டில் உள்நாட்டு கலவரம், உள்நாட்டுப் போர், புரட்சி எது நடந்தாலும் இறுதியில் அது குறித்தான வெள்ளை அறிக்கை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைக் குறித்தும், பிரபாகரன் கொல்லப்பட்டது; புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது குறித்தும், 2009 மே 14, 15, 16, 17, 18, 19 ஏன் 20 ஆம் தேதிகள் வரை தேதிவாரியாக நடந்த நிகழ்வுகளைக் குறித்தும் அதிபர் ராஜபக்சே அரசு வெள்ளை அறிக்கையை ஏன் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை? அதை ஏன் உலக சமுதாயத்தின் பார்வைக்கு அனுப்பவில்லை?

8. பிரபாகரன் இறந்துவிட்டார், இந்தியாவின் உதவியால் புலிகள் அழிக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் போரை எதிர்கொண்டோம் என்ற தெளிவான ஆவணங்களோடு இந்திய அரசுக்கு ராஜபக்சே சிங்கள அரசு ராஜாங்கரீதியாக தாக்கீதுகள் அனுப்பியதா? இப்படியான வினாக்களுக்கு விடைகள் எவை என்பதை பிரபாகரன் குறித்தான இன்றைக்கு நடக்கும் விவாதங்களின் ஊடே வைக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!