பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை: அமைச்சரிடம் முறையீடு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பெரியகுளத்தில் கொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசியது
.
தேனி மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையான பெரியகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டர்களும் இல்லை, போதிய அளவு மருந்துகளும் இல்லை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் அமைச்சரிடம் நேரடியாக முறையீடு செய்தனர்.
தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சர் முரளீதரன் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் உடன் சென்றனர். இக்குழுவினர் பெரியகுளத்திற்கு வந்து தடுப்பூசி போடும் பணிகளை ஆயு்வு செய்தனர். அப்போது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், பெரியகுளம் நகர செயலாளர் ஜோதிமுருகன் உட்பட பலர் அமைச்சரை சந்தித்தனர். அவர்கள் அமைச்சரிடம் கொடுத்த மனுவில், 'பெரியகுளம் அரசு மருத்துவனை நுாற்றாண்டை கடந்த மருத்துவமனை என பெயர் பெற்றது.
தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக உள்ளது. ஆனால், இங்கு தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையும், மருந்துகளுக்கான பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது. இருதய நோய் சிகிச்சை பிரிவு முற்றிலும் செயல் இழந்து உள்ளது. இதேபோல், பல முக்கிய மருத்துவ சிகிச்சைகள் மக்களுக்கு கிடைப்பதில்லை. இரவில் அவசர சிகிச்சை தேவைப்பட்டால், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் கூடுதலாக நியமித்து, மருந்துகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu