முல்லை பெரியாறு உபரி நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கியிலிருந்து கடலில் கலக்கிறது

முல்லை பெரியாறு உபரி நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கியிலிருந்து கடலில் கலக்கிறது
X

முல்லை பெரியாறு அணையின் ஷட்டர்கள் உள்ள பகுதி. இதில் இரண்டு ஷட்டர்கள் இன்று காலை திறக்கப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு கடலுக்கு செல்கிறது

முல்லை பெரியாறு அணையில் இருந்து வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அங்கிருந்து வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அணை நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விடாமல் கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் இன்று காலை முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியை நெருங்கியது. இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இடுக்கி மாவட்ட நிர்வாகம் இன்று காலை தண்ணீர் திறக்குமாறு கேரள அரசு மூலம் தமிழக அரசை வலியுறுத்தியது. இந்த வற்புறுத்தலால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு ஷட்டர்களை திறந்து அணையில் இருந்து விநாடிக்கு 584 கனஅடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது: கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து ஓரு வாரமாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி, முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க வலியுறுத்தனார். தமிழக அரசும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

காரணம் அணையின் ஷட்டர்களை இயக்கும் பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உள்ளது. இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளே இன்று காலை இரண்டு ஷட்டர்களை திறந்து (மொத்தம் 13 ஷட்டர்கள் உள்ளன) விநாடிக்கு 584 கனஅடி நீரை வெளியேற்றி வருகின்றனர். படிப்படியாக இந்த நீர் அதிகரிக்கப்பட்டு அணைக்கு வரும் கூடுதல் உபரி நீர் முழுக்க திறந்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நீர் வல்லக்கடவு பெரியாறு வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

இடுக்கி அணையில் 543 அடி உயரத்திற்கு நீர் தேங்கி உள்ளதால், அந்த நீர் முழுக்க இடுக்கி அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீணாக கடலுக்கு செல்கிறது. அதேநேரம் தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2344 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்து 4194 கனஅடியாக உள்ளது. தமிழக அரசே கேரளாவின் பேச்சை கேட்டு தண்ணீர் திறந்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கடும் போராட்டம் நடத்த விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு