மேகமலையில் ஆக்கிரமிப்பு விவகாரம்: வனத்துறை அமைச்சர் நழுவல்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
தேனி மாவட்டம், மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்னர், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வனத்திற்குள் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை வெளியேற்றும் முயற்சிகளில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட வனநிலங்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நடந்தாலும், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பெரும் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். கூட்டத்திற்கு பின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், நிருபர்கள் 'சரணாலய விதிகள் தளர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், எனக்கு புரியவில்லை. எந்த விதியை தளர்த்தனும்னு கேட்கிறீங்க? என கேட்டார்.
அருகில் இருந்த கலெக்டர் முரளீதரன், மேகமலை பற்றி கேட்கிறார்கள் என அமைச்சருக்கு எடுத்துக்கொடுத்தார். மைக்ரோ செகண்டில் சுதாரித்துக் கொண்ட அமைச்சர், சரணாலய விதிகளை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது.எல்லாமே நீதிமன்றத்தில் இருக்கு. பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கும் போது, நாம் எப்படி அணுகி நீதிமன்றத்தில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போகிறோம் என்பது தான் முக்கியம்' என பதிலளித்து விட்டு வேறு கேள்விக்கு சென்று விட்டார்.
சுற்றுச்சூழல் பாதிப்பே கேரளா எதிர்கொண்ட வெள்ளச்சேதத்திற்கு காரணம். இந்நிலையில், தமிழகத்திலும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாகி உள்ளதே என நிருபர்கள் கேட்டதற்கு, அதுபற்றி விரிவாக ஆய்வு செய்த பின்னர் பதிலளிக்கிறேன் என கூறி விட்டு புறப்பட்டு விட்டார்.
தேனி மாவட்டத்தில் காட்டுத்தீயாய் பற்றி எரியும் புலிகள் சரணாலய ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னையில் அமைச்சர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் சென்றது, அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பதையே காட்டுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu