தேனி கோவிலில் திருடப்பட்ட 9 சாமி சிலைகள்: 24 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்பு
மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் மீட்புக்குழுவினரும் (இடமிருந்து வலம்) தேனி டி.எஸ்.பி.,பால்சுதர், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, பெரியகுளம் டி.எஸ்.பி.,முத்துக்குமார்.
தேனி வேதபுரி தட்ஷிணாமூர்த்தி கோயிலில் காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னால் ஆன 9 சாமி சிலைகள் 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது. சிலை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேனி வேதபுரி தட்ஷிணாமூர்த்தி கோயிலின் கல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட தாயுமானவர், மாணிக்கவாசகர், வியாசர், சனகர், சனதனர், சனந்தர், சனந்தகுமாரர், நந்தி, பலிபீடம் ஆகிய 9 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின.
ஸ்ரீவேதபுரி ஆசிரம மேலாளர் சுரேஷ் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். திருட்டுக்கும்பலை பிடிக்க தேனி டி.எஸ்.பி., பால்சுதர், பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார், பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் பெரியகுளம் வடகரை மில்லர் ரோட்டை சேர்ந்த ஸ்ரீதர், பெரியகுளத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 9 சிலைகளை மீட்டனர். இதன் மொத்த எடை 212.700 கிலோ ஆகும். மதிப்பு 20 லட்சம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீதர் மீது எட்டு வழக்குகள் உள்ளன. அவர் சிலை திருட்டு, கொலை வழக்கு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பலமுறை சிறை சென்றவர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலைகள் காணாமல் போன தகவல் கிடைத்து 24 மணி நேரத்தில் மீட்டெடுத்த போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பாராட்டி சான்று வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu