நாடாளுமன்ற தேர்தல்: இடுக்கி தொகுதியில் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி போட்டி
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ச.அன்வர்பாலசிங்கம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த வாரம் போடி மெட்டை தாண்டி இருக்கும் தோண்டி மலை அருகே மாலை 6:45 மணி அளவில், திருநெல்வேலியில் இருந்து மூணாறு அருகே உள்ள லட்சுமி எஸ்டேட்டிற்கு திருமண வீட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கும் நிலையில், 6 பேர் ஆபத்தான நிலையில் தேனி க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளிகள் வாழும் தேவிகுளம் தாலுகாவில் உள்ள பூப்பாறை சுற்றுவட்டார பகுதியில், ஒரு அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை அமைப்பதற்கு கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
விபத்து நடந்த இடத்தில் இருந்து அடிமாலி அரசு மருத்துவமனை அருகாமையில் இருந்தும், 75 கி.மீ., தொலைவில் உள்ள தேனிக்கு காயம் பட்டவர்களை கொண்டு வருவதற்கு காரணம் அடிமாலி அரசு மருத்துவமனையில் காயச் சிகிச்சை பிரிவு என்று தனியாக இல்லை என்பது தான்.
மூணாறில் இருக்கும் டாட்டா பன்னோக்கு மருத்துவமனையும் போதிய வசதிகள் இன்றி உள்ளது. நீண்ட காலமாக மக்கள் மருத்துவமனை வசதி கேட்டு வருகினறனர். 15 ஆண்டுகள் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜேந்திரனிடம் பலமுறை முறையாவது பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமே கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு முன்னால் 15 ஆண்டுகள் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ கே. மணியிடமும், மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை.
கொடுமை என்னவென்றால் திருப்பூர் மாவட்டத்தையும் தேனி மாவட்டத்தையும் இணைக்கும், சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மூணாறு சரியாக 50 கிலோமீட்டர். 50 கிலோமீட்டர் தூரம் பயணித்து மூணாறு வந்து சேரும் விபத்துக்குள்ளான ஒருவரை, அங்கிருக்கும் டாட்டா மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பெயருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கின்றனர். பின்னர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அல்லது தேனி க. விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்கு குறைந்த பட்சம் 3 மணி நேரம் பயணிக்க வேண்டும்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தேவிகுளம் தாலுகாவில், விபத்துக்குள்ளானவர்களின் நிலை இதுதான். இதே அளவு தொழிலாளிகள் தமிழர்களாக இல்லாமல் மலையாளிகளாக இருந்தால் கேரள மாநில அரசு இந்நேரம் அங்கு அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை கொண்டு வந்திருக்க கூடும். 1957 -ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தேவிகுளம் தாலுகாவில் தொடர்ச்சியாக வெற்றி பெறும் தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள், எதற்கும் லாயக்கற்றவர்களாக போய்விட்ட நிலையில் தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது சங்கத்தின் சார்பில் இடுக்கி நாடாளுமன்ற தொகுதியில் நானே களமிறங்குகிறேன்.
விபத்தில் இறந்த ஒருவருடைய உடலை உடற்கூராய்வு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட, அடிமாலிக்குத்தான் அந்த உடலை கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது. மரணித்தவர்களை வைக்கும் பிணவறை கூட மூணாறு டாடா பன்னோக்கு மருத்துவமனையில் இல்லை. விபத்திலும், மரண போராட்டத்திலும் தமிழர்கள், மலையாளிகள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் கேரள அரசு பாகுபாடு பார்க்கிறது. இதனை சுட்டிக் காட்டினால் எங்களை இனவெறியன் என்கிறது.
தோண்டி மலை விபத்து இதற்கு ஒரு வழியை தேடித் தருமா என்று தெரியவில்லை.. மண வீட்டுக்குச் சென்றவர்கள் பிணமான கதை ஆகப் பெரிய சோகத்தை மூணாறு எஸ்டேட் பகுதிகளில் நிகழ்த்தி இருக்கிறது...அந்தத் துயரத்தில் நாமும் பங்கெடுத்து ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu