ஓ.பி.எஸ். வேகம் காட்ட காரணம் என்ன?
ஓபிஎஸ் - இபிஎஸ் (பைல் படம்)
சுப்ரீம்கோர்ட்டில் அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததுமே, சசிகலாவிடமும் தினகரனிடமும் போனை போட்டு பேசினாராம் ஓபிஎஸ்.. அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும் போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னீங்களே, ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டாராம் சசிகலா.
அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டாராம். அதுமட்டுமல்ல, பாஜக போட்டியிட்டால், நாங்கள் எங்கள் வேட்பாளரை விலக்கி கொள்ள தயார் என்று ஒரு கட்சி தலைவர் சொல்லலாமா? என்ற விமர்சனங்களும் ஓபிஎஸ் மீது பாய்ந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பாஜகவையே நம்பிய நிலையில், இடைத்தேர்தல் சமயத்தில் தான் உச்சக்கட்ட அதிருப்திக்கும் ஆளானாராம் ஓபிஎஸ்.. கடந்த சில நாட்களாகவே, தங்கள் அணியில் இருந்து ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம் சென்று கொண்டிருப்பதால், இதுவும் டெல்லி பாஜகவுக்கு தர்மசங்கடத்தை தந்ததாக சொல்கிறார்கள்.
பாஜகவையே நம்பிக் கொண்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால் தான், மூத்த தலைவரான பண்ருட்டியார் இந்த விஷயத்தை உடனடியாக கையில் எடுத்தார். இடைத்தேர்தல் ரிசல்ட் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களை சந்திக்க போகிறோம்.. மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று கூறியிருந்தார்.. காரணம், ஓபிஎஸ் தன் பலத்தையும், செல்வாக்கையும் அதிமுக தொண்டர்களிடம் மட்டுமல்ல, டெல்லி பாஜகவிடமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளதாகவே தெரிகிறது.. இதற்கு பிறகு தான், ஆர்ப்பாட்டங்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளியானது. சிவகங்கையில் அதற்கான முதல் மணி அடிக்கப்பட்டது. மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருதுஅழகுராஜ், திறம்பட இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டியிருந்தார்..
அப்போது செய்தியாளர்களிடம் பேசியிருந்த மருது அழகுராஜ், சாபம் விடுத்து பேசியிருந்தது பலரையும் கவனிக்க வைத்தது.. "மதுரை ஏர்போர்ட்டில் ஆவேசமாக சீறியது அதிமுக தொண்டன் கிடையாது.. பழனிசாமி முகத்தை பார்த்த உடனேயே இதுமாதிரி கோபங்கள் வருகிறது... வயிறெரிச்சலோடு சொல்கிறோம். இங்கு வந்த கூட்டம் எல்லாம் கொல்லங்குடி காளியம்மன் கோயிலுக்கு சென்று காசை வெட்டி போட்டு விட்டுத் தான் போவோம்... சசிகலா நல்லவரோ, கெட்டவரோ எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார், அவரை தரக்குறைவாக பேசியதோடு தினகரனுக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று சொன்னார்.
ஓபிஎஸ் காலை சுற்றி வந்துவிட்டு இப்போது ஆட்சி போனதுடன் ஓபிஎஸை ஒழிக என சொல்கிறார்.. இந்த நன்றி கெட்ட மனிதருக்கு நல்லது செய்யும் வரிசையில் தற்போது அண்ணாமலையும் இணைந்துள்ளார். ஒருவேளை இவர் நமது இனத்தை சேர்ந்தவர் அவர் நமக்கு உண்மையாக இருப்பார் என்று அண்ணாமலை நினைக்கலாம். துரோகத்திற்கு இனம் கிடையாது.
எடப்பாடியை பொறுத்தவரை துரோகத்தில் ஊறி இருக்கும்.... என்று ஆவேசமாக கூறியிருந்தார். வழக்கமாக, கடும் விமர்சனங்களை வைத்தாலும், கோப வார்த்தைகளை பயன்படுத்தாத மருது அழகுராஜ், வயிறெரிந்து சாபமே விட்டது, எடப்பாடி டீம் மீதான கோபத்தை வெளிப்படுத்தியது. சென்னையில் எடப்பாடிக்கு எதிரான போராட்டத்தை ஓபிஎஸ் தரப்பு நடத்தி காட்டி உள்ளது.. இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் எடப்பாடியை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, பட்டாசாக பொறிந்து தள்ளிவிட்டார். "ஓபிஎஸ் கட்சிக்கு எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை. துரோகம் செய்தது எடப்பாடி தான். அவர் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.. அதனால் அவர் பதவி விலக வேண்டும்.
சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் ஓபிஎஸ்ஸை விமர்சிக்க தகுதியே கிடையாது. உரிய நேரத்தில் தக்கப் பதிலடி அவருக்கு கொடுப்போம்'' என்று ஆவேசமாக கூறியுள்ளார். இந்நிலையில் சோத்துப்பாறை குடிநீர் பிரச்னையில் தி.மு.க.,வை கண்டித்து ஓ.பி.எஸ்., அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது, ஓ.பி.எஸ்.,ஐ விமர்சித்த ஒருவர் தர்மஅடி வாங்கினார். போலீசார் அவரை மீட்டு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
"அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்" என்று எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் நகர்வு வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu